Disabilities Transport Facilities: பொதுப்போக்குவரத்தில் மாற்று திறனாளிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்:
பொதுப்போக்குவரத்தில் மாற்று திறனாளிகளுக்கான பயண அனுபவங்களை எளிதாக்கும் நோக்கில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் வீல் சேர்களுக்கான இடவசதி, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் படிகட்டுகள் இல்லாத கழிவறைகள், சாய்வுப்பாதைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கையாள பயிற்சி பெற்ற நபர்களை விமான, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவைகளில் பணி நியமனம் செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஒரு பகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை, இந்த வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டு பொதுமக்களின் கருத்துகளையும் கோரியுள்ளன.
வரைவு வழிகாட்டுதல்கள் சொல்வது என்ன?
போக்குவரத்து அணுகல் கட்டமைப்பு (Transport Accessibility Framework) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில், பெரும்பாலானவை விவாதத்திற்குட்பட்டவை அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அந்த வழிகாட்டுதல்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் புக்கிங், பயணம், உட்கட்டமைப்பு மற்றும் அவசர சூழலுக்கு பதிலளிப்பது ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேருந்துக்கான வழிகாட்டுதல்கள் என்ன?
- மத்திய அரசு திட்டத்தின் கீழ் இனி கொள்முதல் செய்யப்படும் அனைத்து பேருந்துகளிலும் கீழ் தள நுழைவு, சாய்தள வழி, பாதுகாப்பு பெல்ட்கள், வீல் சேர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்
- PM eBus Sewa மற்றும் Type III இன்டர்சிட்டி பேருந்துகள் போன்ற தற்போதுள்ள சேவைகளும் சோதிக்கப்பட்ட லிஃப்ட் அல்லது சாய்வுதளங்களை உள்ளடக்கிய மறுசீரமைப்புக்கு உட்படும்.
- ஒவ்வொரு பேருந்திலும் குறைந்த இயக்கம் கொண்ட பயணிகளுக்கு சீட் பெல்ட்களுடன் கூடிய குறைந்தது நான்கு இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும்
மெட்ரோ, ஏர்போட்டிற்கான வழிகாட்டுதல்கள்
-
மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளுக்கு, நடைமேடைகளில் ரப்பர் கேப் ஃபில்லர்ஸ் மற்றும் ஏறும் சாய்வுப் பாதைகள் இருக்க வேண்டும்
-
சக்கர நாற்காலி அணுகலுக்காக பெட்டிகள் இருக்க வேண்டும்
-
நீண்ட தூர ரயில்களில் சக்கர நாற்காலி நங்கூரமிடலுடன் கூடிய அணுகக்கூடிய ஒரு பெட்டியும், கிராப் பார்கள் பொருத்தப்பட்ட டைப் A கழிப்பறையும் இருக்க வேண்டும்
-
விமான நிலையங்களில், பார்க்கிங் பகுதிகளிலிருந்து செக்-இன் செய்வதற்கு படிக்கட்டு இல்லாத அணுகலையும், ரோல்அவுட் ராம்ப்களுடன் கூடிய ஏரோபிரிட்ஜ்களையும் கொண்டிருக்க வேண்டும்
-
விமானங்களில் சக்கர நாற்காலிக்கு ஏற்ற இருக்கைகள் கிடைப்பதை உறுதிசெய்ய விமான நிறுவனங்கள் உதவி சாதனங்களுக்கான சேமிப்பு இடத்தையும் வழங்க வேண்டும்
டாக்சிகளுக்கும் இதுபோன்ற சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை பொதுமக்களின் கருத்துகளை பெற்ற பிறகு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. இதனால் மாற்று திறனாளிகளும் இனி எளிதில் பொதுப்போக்குவரத்தை அணுக முடியும் என நம்பப்படுகிறது.