கொச்சியில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


வெளிநாடுகளில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் இசையமைப்பாளர்களின் இசைக் கச்சேரிகள் இந்தியாவை பொறுத்தவரை வெகு அரிதாகவே நடைபெற்று வந்தன. ஆனால் சமீப காலமாக இசைக் கச்சேரிகள் அதிக அளவில் நடைபெற தொடங்கியுள்ளது இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தாலும், இதில் இருக்கும் சிக்கல்கள் அதிகம். முறையான பாதுகாப்பு ஏற்பாடு தொடங்கி ரசிகர்களை கட்டுப்படுத்துவது வரை கிட்டதட்ட பல பிரச்சினைகளை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அதனை ஏற்பாடு செய்த நிர்வாகத்தினர் சந்திக்க வேண்டும். 


இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி பலத்த சர்ச்சைகளை சந்தித்தது. முறையான டிக்கெட்டுகளை பெற்றவர்கள் கூட அந்த நிகழ்ச்சியை காண முடியவில்லை என குமுறினர். இதனால் முறைப்படி டிக்கெட் பெற்றும் நிகழ்ச்சியை காண முடியாதவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் கொச்சியில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (குசாட்) டெக் ஃபெஸ்ட் (Tech Fest) நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் ஒரு பகுதியாக பின்னணி பாடகி நிகிதா காந்தி பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது  திடீரென பெய்த மழை பெய்துள்ளது. இதனால் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அருகிலுள்ள பகுதிக்கு விரைந்து ஓடியுள்ளனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் கீழே விழுந்துள்ளனர். 


இந்த எதிர்பாராத சம்பவத்தால் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். இவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் இன்னும் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை . உடனடியாக காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக களமசேரி மருத்துவக் கல்லூரி மற்றும் கிண்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே  பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தரப்படும் என  மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 


அதேசமயம் இசை நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் மாநில தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் மற்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் ஆர். பிந்து ஆகியோர் பல்கலைக்கழத்திற்கு நேரடியாக சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதனிடையே இசை நிகழ்ச்சியில் அல்லது கல்லூரி விழாக்களில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் அலட்சியம் காட்டப்படுவதாக இணையவாசிகள் விமர்சித்துள்ளனர். திறந்தவெளி இடத்தில் நிகழ்ச்சி நடைபெற்றாலும் குறைந்தப்பட்சம் பந்தல் உள்ளிட்டவை போடப்பட்டிருந்தால் திடீரென பெய்த மழையால் மாணவர்கல் சிதறி ஓடியிருக்க மாட்டார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.