கடந்த சில மாதங்களாகவே காந்திக்கு எதிராக குறிப்பிட்ட பிரிவினர் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரூபாய் நோட்டில் இருக்கும் மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக நேதாஜியின் புகைப்படத்தை இடம்பெறச் செய்ய வேண்டுமென அகில பாரத இந்து மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.


சுதந்திர இந்தியாவில் ரூபாய் நோட்டுகளில் ஒருவரின் படம் இடம் பெற்றிருக்கிறதென்றால் அவர், காந்தி ஒருவர் மட்டுமே. சுதந்திரத்துக்கு பின்னர் இந்திய ரூபாய் நோட்டுகளில் முதலில் சாரநாத் சிங்கமுகத் தூண்கள் இடம்பெற்றன.  1969ஆம் ஆண்டு முதல் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படமும் இடம்பெறத் தொடங்கியது.


காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாத்தின்போது அவரை கவுரவிக்கும் வகையில் 1969ஆம் ஆண்டு 100 ரூபாய் நோட்டில் காந்தியின் படம் முதன்முதலாக இணைக்கப்பட்டது. தொடர்ந்து 1987ஆம் ஆண்டு 500 ரூபாய் தாளில் காந்தியின் புகைப்படம் இடம்பெற்றது. 1996ஆம் ஆண்டிலிருந்து பிற ரூபாய் தாள்களிலும் அவரது புகைப்படம் இடம்பெற்றது.


தஞ்சை பெரிய கோயில், ஆர்யபட்டா செயற்கைக்கோள் உள்ளிட்ட படங்கள் சுதந்திர இந்தியாவில் இதுவரை வெளியான நோட்டுகளில் இடம்பெற்றிருந்தாலும், காந்தியைத் தவிர வேறு தலைவர்கள் எவரது புகைப்படமும் இந்த 75 ஆண்டுகளில் இடம்பெற்றதில்லை.


இந்நிலையில், ரூபாய் நோட்டுகளில் இருக்கும் மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக நேதாஜியின் புகைப்படத்தை இடம்பெறச் செய்ய வேண்டுமென அகில பாரத இந்து மகாசபை கோரியுள்ளது. மேலும் காந்தியை விட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்களிப்பு குறைந்தது அல்ல என்றும் அகில இந்து மகாசபை கூறி உள்ளது.


முன்னதாக நவராத்திரி பண்டிகையின்போது துர்கா பூஜையில், மகிசாசுரனுக்கு பதில் துர்க்கை மகாத்மா காந்தியை வதம் செய்வது போல் சிலை வடிவமைத்தும், இதே அகில பாரத இந்து மகாசபை அமைப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.


 






இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் நாடு முழுவதும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் கூட, மேற்குவங்கம் கொல்கத்தாவில் துர்கா பூஜையின்போது துர்கை சிலையின் கீழே இருக்கும் அசுரர் காந்தியை போல வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.