கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பல பாரம்பரிய நினைவு சின்னங்கள், வரலாற்று இடங்களுக்கு வேறு பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்திற்கு பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.
நேருவின் புகழை சிதைக்க முயற்சியா?
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக செயல்பட்ட கட்டிடத்தின் வளாகத்தில்தான் நேரு நினைவு அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது. அங்கு, பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா (பிரதமர்களின் பங்களிப்பை போற்றும் அருங்காட்சியகம்) திறக்கப்பட்டு ஒரு வருடமாகியுள்ள நிலையில், அதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் பிரதமரான நேருவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் வகையில், பெயர் மாற்றப்பட்டுள்ளது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. "சரித்திரம் இல்லாதவர்கள், பிறர் வரலாற்றை துடைத்தெறிந்து வருகிறார்கள். நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்றுவது மோசமான செயல்.
"பாஜக-ஆர்எஸ்எஸ்ஸின் கீழ்த்தரமான மனநிலை"
நவீன இந்தியாவின் சிற்பி மற்றும் ஜனநாயகத்தின் அச்சமற்ற பாதுகாவலரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஆளுமையை குறைத்து மதிப்பிட முடியாது. இது பாஜக-ஆர்எஸ்எஸ்ஸின் கீழ்த்தரமான மனநிலையையும் சர்வாதிகாரப் போக்கையும் காட்டுகிறது" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
நேரு அருங்காட்சியத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ள காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "சிறுமையும் பழிவாங்களுக்கு மறு பெயர் மோடி. 59 ஆண்டுகளுக்கும் மேலாக நேரு நினைவு அருங்காட்சியகம் & நூலகம் (NMML) புத்தகங்கள் மற்றும் காப்பகங்களின் புதையல் இல்லமாக உள்ளது. உலகளாவிய அறிவுசார் அடையாளமாக உள்ளது.
"தொலைநோக்கு பார்வை காங்கிரசுக்கு இல்லை"
இது இனி பிரதமர் அருங்காட்சியகம் & நூலகம் என்று அழைக்கப்படும். இந்திய தேசிய-அரசின் சிற்பியின் பெயரையும், பாரம்பரியத்தையும் சிதைக்க, இழிவுபடுத்த, அழிக்க மோடி வேறு என்னதான் செய்ய மாட்டார். ஒரு சிறிய, சிறிய மனிதன் தனது பாதுகாப்பின்மையால் அதிக சுமைக்கு உள்ளானார். சுயபாணியான விஸ்வகுரு" என குறிப்பிட்டுள்ளார்.
அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றத்தை பாஜக ஆதரித்ததோடு, இந்த விவகாரத்தை அரசியலாக்குவதை நிறுத்துமாறு காங்கிரஸிடம் கூறியுள்ளது. காங்கிரஸ் விமர்சனத்திற்கு பதிலடி தந்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டா, "ஒரு குடும்பத்தை தாண்டியும் தலைவர்கள் நம் தேசத்திற்கு சேவை செய்து அதை கட்டியெழுப்பியுள்ளனர் என்ற எளிய உண்மையை ஏற்றுக்கொள்ள இயலாமை உள்ளது. பிரதமர் சங்கரஹலயா என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு முயற்சி. இதை உணரும் தொலைநோக்கு பார்வை காங்கிரசுக்கு இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.