ஆளும் பாஜக மற்றும் எதிர்கட்சிகளின் பிரமாண்ட கூட்டம் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதை தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி:


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும், ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட, 38 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பது உறுதியாகியுள்ளதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். மோடி பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறை. இதில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல், தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய வரவு:


மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதியதாக இணைந்துள்ளன.


பாஜக விமர்சனம்:


எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடர்பாக பேசிய நட்டா “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடந்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் வழக்குகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் சுயநல நோக்கத்துடன் எதிர்கட்சிகள் ஒன்றிணைகின்றன. இது ஒரு நல்ல புகைப்படத்திற்கான வாய்ப்பு" என சாடினார். 


எதிர்கட்சிகளின் கூட்டணி:


இதனிடையே, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவ வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன், திமுக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் முன்னெடுத்தார். அதன் விளைவாக கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைதொடர்ந்து, தற்போது ஒருமாத இடைவெளிக்குள்ளேயே எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 26 கட்சிகளை சேர்ந்த சோனியா காந்தி, சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 4 முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 


என்ன எதிர்பார்க்கலாம்?


இந்த கூட்டத்தின் முடிவில் பாஜகவை வீழ்த்துவதற்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது, கூட்டணி அமைத்து பல்வேறு தொகுதிகளில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது, குழு ஒன்றை அமைத்து கூட்டணி திட்டங்களை வகுப்பது, தேர்தல் பணிகளை முன்னெடுப்பது, முக்கிய அம்சங்களை விவாதிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டுவது குறித்தும் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சூடுபிடிக்கும் தேர்தல் களம்:


ஒரே நேரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இரண்டு இடங்களில் கூடியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2024ம் ஆண்டு தேர்தல் பணிகள் சூடுபிக்க தொடங்கிவிட்டன. கூட்டணிக்குள் விட்டுக்கொடுத்து சென்றாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் என எதிர்கட்சிகள் முனைப்பு காட்டி வரும் நிலையில், பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என அக்கட்சி தலைமை நம்பிக்கை தெரிவித்து வருகிறது. அதேநேரம், தேர்தல் நேரத்தில் எந்த கட்சிகள் எந்த கூட்டணிக்குள் இருக்கும், எந்த கட்சி எந்த கூட்டணியில் இருந்து வெளியேறும் என்பது காலம் போக போக தான் தெரியும்.  தெலுங்கு தேசம், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் சேருமா?, காங்கிரஸ் உடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் நீடிக்குமா என்பதெல்லாம் விடை தெரியா கேள்வியாகவே நீடிக்கிறது.