செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று அறிவித்தது தமிழ்நாட்டு அரசியலில் மட்டும் இன்றி தேசிய அளவிலும் பெரும் புயலை கிளப்பியது. குறிப்பாக, முதலமைச்சரின் ஒப்புதல் இன்றி அமைச்சர் ஒருவரை ஆளுநர் நீக்குவது அரிதிலும் அரிதான ஒன்று. 


இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.


எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அரசியல் நெருக்கடியா?


எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு தொடங்கி கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம், டெல்லி என இந்த பட்டியல் நீள்கிறது. குறிப்பாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என மாநில அரசுகள் குற்றஞ்சாட்டி வருகிறது.


இந்த பிரச்னை, பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ள நிலையில், செந்தில் பாலாஜி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் தமிழ்நாடு ஆளுநரின் செயலுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சூலே கண்டனம் தெரிவித்துள்ளார்.


தேசிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் செந்தில் பாலாஜி விவகாரம்:


மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநரை போல் அல்லாமல் பாஜகவின் ஆளுநர் போல் நடந்து கொண்டார். இது சர்வாதிகாரம். அரசியலமைப்பும் ஜனநாயகமும் எங்கே போனது? இப்படி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடக்குமானால் மற்ற மாநிலங்களிலும் நடக்கலாம்" என்றார்.


அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதினார். அதில், "இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.


அமைச்சராக யாரை நியமிக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உரிமை.  அமைச்சர் பொறுப்பில் புதிதாக ஒருவரை சேர்ப்பதோ அல்லது நீக்கம் செய்வதோ முதல்வரின் முடிவுகளுக்கு உட்பட்டது. பதவிப் பிரமாணம் செய்து வைக்க மட்டுமே, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. முதலமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது" என குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சட்ட வல்லுநர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.