மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக நடந்த வரும் இனக்கலவரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. கலவரத்தை சரியாக கையாளாததால் முதலமைச்சர் பைரன் சிங், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இதனிடையே, தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார் பைரன் சிங்.

Continues below advertisement

ராஜினாமா கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட முதலமைச்சர்:

இது தொடர்பான தகவல் வெளியான நிலையில், மக்கள் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர். பொது மக்களின் அழுத்தம் காரணமாக மனம் மாறிய பைரன் சிங், பதவி விலகும் முடிவை பைரன் சிங் திரும்ப பெற்றதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ராஜினாமா கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்கு பைரன் சிங் புறப்பட்டதாகவும், ஆனால், இம்பாலில் உள்ள அவரது வீட்டில் வெளியே மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து திரும்பியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Continues below advertisement

பதவி விலகமாட்டேன்:

அவர் ராஜினாமா செய்வதை விரும்பவில்லை என்று கூறி நூற்றுக்கணக்கான பெண்கள் பைரன் சிங்கின் இல்லம் அருகே கூடி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழிக்கப்பட்ட பைரன் சிங்கின் ராஜினாமா கடிதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில், பொதுமக்களின் அழுத்தம் மற்றும் அரசியல் சூழல் காரணமாக தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று பைரன்சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மணிப்பூரில் ராகுல்காந்தி:

மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்களை சந்தித்து பேசச உள்ளார். ஐக்கிய நாகா கவுன்சில் (UNC) தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோரை இம்பாலில் உள்ள விடுதியில் ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளதாக மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "அரசியல் விவகாரங்கள் குறித்து இங்கு கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை. நான் அரசியல் கருத்து எதுவும் கூற இங்கு வரவில்லை. இந்த விவகாரங்கள் குறித்து இங்கு கருத்து தெரிவிக்க மாட்டேன். விரைவில் இங்கு அமைதி திரும்ப வேண்டும்" என்றார்.

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்ட ராகுல் காந்தி, "மணிப்பூரில் நடந்த வன்முறையால் சொந்தங்களையும், வீடுகளையும் இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பதும் கேட்பதும் மனவேதனை அளிக்கிறது. நான் சந்திக்கும் ஒவ்வொரு சகோதரன், சகோதரி மற்றும் குழந்தையின் முகத்திலும் உதவிக்கான அழுகை இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்த ராகுல் காந்தி, "மணிப்பூருக்கு இப்போது மிக முக்கியமாக தேவைப்படும் விஷயம் அமைதி. நமது மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது. அந்த இலக்கை நோக்கி நமது முயற்சிகள் ஒன்றிணைய வேண்டும்" என்றார்.