பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்பான பணமோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை செய்ய உள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பணமோசடி செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க இன்று காலை அமலாக்கத்துறையினர் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கின் வீட்டிற்கு சென்றதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது அந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரை கைது செய்த பின்பு மருத்துவ பரிசோதனைக்காக அமலாக்கத்துறை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது. இதன்பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவருடைய கைது தொடர்பாக சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசிற்கு எதிராக யார் குற்றம்சாட்டினாலும் அவர்கள் மீது இது போன்ற நடவடிக்கை பாய்ந்து வருகிறது என்று இரு கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் இந்த கட்சிகளின் குற்றச்சாட்டை பாஜக மறுத்து வருகிறது. நவாப் மாலிக் தாவூத் இப்ராஹிமிற்கு தொடர்புடைய நபரிடம் இருந்து நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். ஆகவே தான் அவர் மீது விசாரணை நடத்தப்படுகிறது என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 1993ல் மும்பையில் நடந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தாவூத் இப்ராஹிம். இவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். இவருடன் தொடர்பில் உள்ள நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. 1993ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி அபுபக்கர் 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். எனினும் தற்போது வரை தாவூத் இப்ராஹிம் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தகவல் கிடைக்கவில்லை. தாவூத் இப்ராஹிம் மீதான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை தீவிரம் காட்டிவருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்