Tirumala Temple: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 15 ஆம் தேதி (நாளை) முதல் 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.


திருப்பதி கோயில்:


ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து அந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இன்றுடன் புரட்டாசி மாதம் நிறைவடைய உள்ளதால், தென்னிந்தியா மட்டுமின்றி நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.


இந்நிலையில், திருப்பதி கோயிலில் வரும் 15ம் தேதி (நாளை) தொடங்கி 23ம் தேதி வரையில் நவராத்திரி பிரமோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று அங்குரார்பனாமும்,  நாளை  கொடியேற்றமும் நடைபெற உள்ளது.  


தேவஸ்தானம் அறிவிப்பு:


பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் கூட்ட நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் நோக்கில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது, பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசனங்கள் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


இதன் மூலம் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் காத்திருப்பு நேரம் குறையும் என தேவஸ்தானம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதிகப்படியான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் இது உதவும் என கருதப்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக, இருசக்கர வாகனங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.  இதற்கிடையில், ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம். வரும் 19ஆம் தேதி ஆகம விதிகளின்படி 30 நிமிடங்களுக்கு முன்பாக 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


சிறப்பு பேருந்துகள் இயக்கம்:


திருப்பதியில் நாளை முதல் நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் திருவிழாவினை முன்னிட்டு,  பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


மேலும், 26ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள https://www.tnstc.in/home.html டி.என்.எஸ்.டி.சி. செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.