இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் (NEET-UG) மறுதேர்வு இன்று நடைபெற்ற நிலையில், அதை பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்: 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே தேர்வு முடிவுகளும் வெளியாகின. 


இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.


முதலில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்தது. ஆனால் இதுதொடர்பான விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டனர். பிஹார், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கைது நடந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார்.


பாதிக்கும் மேற்பட்டவர்கள் மறுதேர்வு எழுதாதற்கு காரணம் என்ன? இதற்கிடையே, நடந்து முடிந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு, அதனை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 1,563 பேருக்கும் மறுதேர்வு நாடு முழுவதும் 7 மையங்களில் நடைபெற்றது.


இந்த நிலையில், இன்று நடைபெற்ற மறுதேர்வில் 48 சதவிகித மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மறுதேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள சில தேர்வு மையங்களில் கடந்த மே 5 ஆம் தேதி, நீட் தேர்வு காலதாமதமாக தொடங்கியது. காலதாமதம் காரணமாக சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.


ஆனால், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணானது தேசிய தேர்வு முகமையால் ரத்து செய்யப்பட்டது.