மேற்குவங்கத்தில் பெண் ஒருவரை நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கூடியிருந்த மக்கள் மத்தியில் பெண்ணை தடியை கொண்டு ஒருவர் தாக்குவதும் அதை தட்டி கேட்காமல் மக்கள் வேடிக்கை பார்த்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 


வெளியான பரபரப்பு வீடியோ: அதோடு, மற்றொரு நபரையும் அவர் சரமாரியாக தாக்குகிறார். இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வடக்கு வங்கம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோப்ராவில் இந்த சம்பவம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளனர்.


கடந்த வாரம், இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், இதுதொடர்பாக மேற்குவங்க டிஜிபிக்கும் தலைமை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய குழு ஒன்றை அனுப்பப் போவதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.


தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி: இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த காலங்களில் இதுபோன்று நடந்த சம்பவங்கள் அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையம் எழுப்பிய பிரச்னைகளில் இருந்து மாநில அதிகாரிகள் எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்த விஷயம் சுட்டிக்காட்டுகிறது.


இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணை எந்த நிலையில் உள்ளது? பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை எப்படி உள்ளது? அவர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை அடங்கிய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.


பாதிக்கப்பட்ட காதல் ஜோடிகளின் விவகாரத்தை பொதுவெளியில் (பஞ்சாயத்தில்) கோபத்தில் இருந்த கிராம மக்கள் விவாதித்துள்ளனர். அப்போது, ​​அடையாளம் தெரியாத நபர் இருவரையும் சரமாரியாக தாக்கினர். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவரே இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


பார்வையாளர்களாகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் தம்பதியினரை அவர் கடுமையாகத் தாக்கும் வீடியோவை வைரல் வீடியோவில் காணலாம். இது தனித்த சம்பவம் அல்ல. மூர்க்கமான சக்திகள், தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்து கொண்டு அப்பாவி மக்களை, குறிப்பாக பெண்களை பலிவாங்குகிறது.


மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில் பெண்களை இழிவுபடுத்தும் அவமானகரமான சம்பவங்கள் குறித்தும் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது" என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.


பெண்ணை தாக்குபவர் உள்ளூரில் செல்வாக்குமிக்க நபராக கருதப்படும் தஜேமுல் என கூறப்படுகிறது. அவருக்கு ஆளும் திரிணாமுல் கட்சியுடன் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. உள்ளூர் மட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக தஜேமுல் மீது புகார் உள்ளது.