கனடாவில் நடைபெறும் சர்வதேச காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் ’மேட் இன் சைனா’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


'மேட் இன் சைனா’ வாசகம்


கனடா நாட்டில் நடைபெறும் சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட கொடியில் 100% பாலிசிஸ்டர் எனும் வாசகத்தின் கீழ் ’மேட் இன் சைனா’ என அச்சிடப்பட்டிருந்தது. இந்தியப் பிரதிநிதிகள் இந்தியாவில் தயாரிக்கப்படாத, சைனாவில் தயாரிக்கப்பட்ட கொடிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என முன்னதாக சர்ச்சை வெடித்துள்ளது.


இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பிற மாநில சபாநாயகர்கள் மற்றும் பல்வேறு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் ஏந்தியிருந்த கொடிகளில் இவ்வாறு அச்சிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இச்சம்பவம் விவாதப்பொருளாக மாறியுள்ளது






மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட கொடி பயன்படுத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சபாநாயகர்கள் முன்னதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாடு


கனடா நாட்டின் ஹாலிபேக்ஸ் நகரில் 65ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து சபாநாயகர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக தனக்கு வந்த அழைப்பை ஏற்று  சபாநாயகர் அப்பாவு முன்னதாக கனடா சென்றுள்ளார். அவருக்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.


ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு இன்று ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது. உலக அளவில் கவனம் ஈர்க்கும் இந்த முக்கிய மாநாட்டில் நடைபெற்ற இச்சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. மேலும் கனடா அரசு தரப்பில் இந்தக் கொடிகள் வழங்கப்பட்டனவா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


உறுதி செய்த சபாநாயகர் அப்பாவு


இந்நிலையில் முன்னதாக இச்சம்பவம் குறித்து பேசிய தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, ”தேசியக் கொடிகள் பெருமளவு சீன நாட்டில் இறக்குமதி செய்யப்படுவதாக ஏற்கெனவே பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து மக்களவை சபாநாயகரிடம் அனைத்து மாநில சபாநாயகர்களும் முறையிட்டிருந்தோம், இது அனைவரையுமே கஷ்டப்படுத்தியது.


இந்தியாவில் தமிழ்நாட்டிலேயே கரூர், நாமக்கல், சிவகாசி பகுதிகளிலேயே தேசியக்கொடி தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன, இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது எனத் தெரியவில்லை. சீனாவின் பெயரோடு கொடியைத் தாங்கியது வேதனையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.