மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. வீடியோவை பார்த்த, செய்தியை கேட்ட ஒவ்வொருவரும், தங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என குற்ற உணர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். ஏதோ ஒரு மூளையில் நடந்த சம்பவம், எளிய மக்களின் மனதை தட்டி எழுப்பியுள்ளது.
ஆனால், சர்வ அதிகாரம் படைத்த செல்வாக்கு மிக்க பொறுப்பில் உள்ளவர்கள், நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியவர்கள், சம்பவம் பற்றி தெரிய வந்த பிறகும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருப்பது அரசு இயந்திரம் எந்தளவுக்கு செயலிழந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
ஒரு மாதத்திற்கு முன்பே தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்ற புகார்:
கடந்த மே 4ஆம் தேதி பழங்குடி பெண்களுக்கு இந்த கொடூரம் நேர்ந்துள்ளது. சொல்ல முடியாத துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகுதான், அதாவது ஜூலை 19ஆம் தேதிதான், அந்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், வீடியோ வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் சென்றுள்ளது. ஆனால், அவர்கள் போதுமான நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
பெண் உரிமை ஆர்வலர்கள் இருவர், வட அமெரிக்க மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் என்ற மனித உரிமைகள் அமைப்பு, கொடூரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்திடம் கடந்த ஜூன் 12ஆம் தேதி புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் மட்டும் இன்றி, குக்கி பழங்குடி பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட 6 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான புகாரை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவருக்கு அவர்கள் மெயில் மூலம் அனுப்பியுள்ளனர்.
தூங்கி கொண்டிருந்தது தேசிய மகளிர் ஆணையமா? பாஜக அரசா?
அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது சம்பவமானது கடந்த மே 4ஆம் தேதி நடந்துள்ளது. காங்போக்பி மாவட்டத்தின் பி பைனோம் கிராமத்தில் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி தாக்கியுள்ளனர். இந்த சம்பவமும் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது சம்பவம், மே 3ஆம் தேதி, இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்துள்ளது. குகி ஜோமி சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளது. நான்காவது சம்பவம், மே 4 அன்று இம்பாலில் உள்ள நைட்டிங்கேல் செவிலியர் நிறுவனத்தில் நடந்துள்ளது.
இரண்டு இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். ஐந்தாவது சம்பவம், மே 5 அன்று இம்பாலின் கொனுங் மாமாங் பகுதியில் அரங்கேறியுள்ளது. இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காங்போக்பி மாவட்டத்தின் பெய்தாய்ச்சிங் கிராமத்தில் 45 வயது பெண் கொல்லப்பட்டதாகவும், மே 15ஆம் தேதி அன்று, வாங்கேயில் 18 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பெண் உரிமை ஆர்வலர்கள் நேர்காணல் எடுத்துள்ளனர். அதன் அடிப்படையில்தான், புகார் அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அரசு தெரிவித்ததைவிட அதிகமாக இருக்கும் என பெண் உரிமை ஆர்வலர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். பழங்குடி பெண்களின் வீடியோ வெளியான பிறகு, சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொள்வதாகவும், மணிப்பூர் காவல்துறை இயக்குநர், இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் ட்வீட் செய்தது.
ஒரு மாதத்திற்கு முன்பே புகார் வந்த பிறகும், சம்பவம் குறித்து தானாக முன் வந்து விசாரணை எடுத்து கொள்வதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்ததற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், "புகார் கடிதம் பெற்று கொண்டது உண்மை. அதன் தொடர்ச்சியாக, மணிப்பூர் தலைமை செயலாளருக்கு நடவடிக்கை எடுக்க ஜூன் 19 அன்று கடிதம் எழுதினோம். இதுவரை, மே 23, மே 29 மற்றும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் மணிப்பூர் அரசுக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளோம்" என்றார்.