ISRO NISAR GSLV-F16: இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைகோள் GSLV-F16 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
நிசார் செயற்கைகோள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் சேர்ந்து, சிந்தெடிக் அபெர்ட்சுர் ரேடார் எனும் செயற்கைகோளை உருவாக்கியுள்ளது. சுருக்கமான நிசார் என குறிப்பிடப்படும் இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.40 மணியளவில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இதற்கான 27.5 மணி நேர கவுண்டவுன் நேற்று பிற்பகல் 2:10 மணியளவில் தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்வெளிக்கு மேற்கொள்ளப்படும் 102வது பயணம் இதுவாகும். சூரிய-ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதைக்கு செலுத்தப்படும் முதல் GSLV ராக்கெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
செயற்கைகோளின் பலன் என்ன?
நாசா மற்றுமிஸ்ரோ ஆகியா இரு அமைப்புகளும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டாக உழைத்து, நிசார் செயற்கைகோளை உருவாக்கியுள்ளது. இது பூமியின் நிலம் மற்றும் பனி மேற்பரப்புகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க உதவும் உயர் தெளிவு திறன் கொண்ட, டூயல் பேண்ட் ரேடார் டேட்டாக்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. விண்ணில் செலுத்தப்பட்டதும், 19 நிமிட பயணத்தில் பூமியில் இருந்து 740 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று திட்டமிடப்பட்ட இலக்கை அடைய உள்ளது. இது இந்தியாவிற்கான நிலப்பரப்பை மட்டும் கண்காணிக்காமல் உலகளாவிய கண்காணிப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்கைகோளில் இந்தியாவின் எஸ்-பேண்ட் மற்றும் நாசாவின் எல்-பேண்ட் என இரண்டு ரேடார் அமைப்புகளை கொண்டுள்ளது. இவை தெளிவான புகைப்படங்களை உருவாக்க உதவுகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு 12 நாட்களுக்கும் நில இடப்பெயர்ச்சி, பனிக்கட்டி இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கவியல் தொடர்பான தரவுகள் கிடைக்கும். இதனால், கடலோர அரிப்பு, பனிப்பாறை மாற்றங்கள் மற்றும் விவசாய மாற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பான் விவரங்களை பெற முடியும்.
கம்பேக் கொடுக்குமா இஸ்ரோ?
மூன்று கட்டங்களை கொண்டுள்ள இந்த ராக்கெட், 18வது முறையாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மூன்று கட்டங்களை கொண்ட இந்த ராக்கெட்டின் மேல் தளத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரையோஜெனிக் இன்ஜின் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக கடந்த மே மாதம் 18ம் தேதி EOS-09 எனும் செயற்கைகோளை ஏந்தியபடி, PSLV-C61 ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டது. திட்டத்தின் மூன்றாவது கட்ட செயல்பாட்டின் போது, கண்காணிப்பு மற்றும் இலக்கு திட்டமிட்டபட செயல்படாமல் தோல்வியை சந்தித்தது. மொத்தமாக நான்கு கட்டங்களை கொண்ட ராக்கெட்டின் முதல் இரண்டு கட்டங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டன. ஆனால் மூன்றாவது கட்டத்தில் தொழில்நுட்ப கோளாறால் இஸ்ரோவின் முயற்சி தோல்வியுற்றது. அதன் பிறகு இஸ்ரோ மேற்கொள்ளும் முதல் பணி இதுவாகும். எனவே, இதில் வென்று இந்தியா கம்பேக் கொடுக்குமா? என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.