Modi Swearing-in Ceremony Guests: வரும் ஞாயிற்றுக்கிழமை மோடி 3.0  ஆட்சி தொடங்குகிறது. அதற்காக பிரதமராக மோடி பதவியேற்கும் விழா குடியரசுத்தலைவர் மாளிகையின் பிரம்மாண்ட புல்வெளியில் நடைபெறுகிறது. மோடியுடன், 25 முதல் 30 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர்.


பிரதமர் மோடி பதவியேற்பு:


கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு போலவே, இந்த முறையும் வெளிநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் பங்கேற்க மோடி திட்டமிட்டுள்ளார். அதற்காக, இந்த முறையும் யாரையெல்லாம் அழைக்க வேண்டும் எனத் தீர்மானித்து, குடியரசுத்தலைவர் மாளிகை மூலம் முறைப்படி அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
வரப்போகும் தலைவர்கள் யார்? யார்?


குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஏபிபி நாடு-வுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்களின்படி, 7 வெளிநாடுகளின் முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்தமுறை, நமது அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படுகின்றன. அதன்படி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் அசீனா, மாலத்தீவு அதிபர் முகம்மத், ஷெசல்ஸ் நாட்டு அதிபர் வேவல் ராம் கலவான், நேபாள பிரதமர் புஷ்ப கமல் பிரசாந்தா, பூடான் பிரதமர் துஷேரீங் துப்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜூக்நாத் ஆகியோர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர். 


200 சிறப்பு அழைப்பாளர்கள்: 


இந்த முறை பெரும் தலைவர்கள் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200 சாதாரண குடிமகன்களையும் அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பிரதமரின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள், திருநங்கைகள், மெட்ரோ ரயில் ஓட்டுநர்கள், வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்கள், பழங்குடியினர், கடந்த 10 ஆண்டுகளில் மோடியால் பாராட்டப்பட்ட சாதாரண குடிமகன்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பதவி ஏற்பு விழாவுக்கு வருகின்றனர்.


ஆன்மீக தலைவர்கள் 50 பேருக்கு அழைப்பு:


பல்வேறு மதங்களைச் சேர்ந்த 50 ஆன்மீக தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பிரதமர் மோடி, ஆசி பெறுவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இதுமட்டுன்றி, பத்ம விருதுகள் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோருக்கும் அழைப்புகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. இவர்களுடன், பிரசித்திப் பெற்ற டாக்டர்கள், வழக்கறிஞர்கள், திரைத்துறையினர்  ஆகியோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறதாம்.


முதலமைச்சர்கள், ஆளுநர்கள் அழைப்பு:


 நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முதலைமைச்சர்களுக்கும் ஆளுநர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், இந்தத் தகவல் மட்டும், குடியரசுத் தலைவர் மாளிகையோ அல்லது அரசின் மற்ற துறைகளோ உறுதிப்படுத்தவில்லை. எது எப்படி இருப்பினும், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் பல்வேறு ஆளுநர்களும் பங்கேற்பார்கள் என்பது மட்டும் உறுதி. 


100 நாள் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடும் மோடி:


NDA எனப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில், நாடாளுமன்ற என்.டி.ஏ. தலைவராகவும் தேர்வு செய்யப்பட்ட மோடிக்கு, 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க வேண்டும் என கூட்டணி தலைவர்கள் பரிந்துரைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட மோடி, பதவியேற்பு விழா குறித்து அமித் ஷா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி, யாருக்கெல்லாம் அழைப்பு கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.


14 கட்சிகளின் கூட்டணி தலைவர்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்துடன் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆதரவு கோரும், நரேந்திர மோடி, வரும் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார். இந்த விழா முடிந்தவுடன், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தின் போது, 100 நாள் திட்டம் குறித்து பிரதமர் மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கொண்டாடும் பாஜக:


மோடி 3-வது முறையாக பிரதமராகப் பதவியேற்பதை நாடு முழுவதும் உள்ள பாஜக-வினர் கொண்டாடி தீர்க்க தீர்மானித்துள்ளனர். அதற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லி, தற்போது விழாக் கோலம் பூண்டு வருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஜொலிக்கத் தொடங்கியுள்ளன.