நாரதா வழக்கில் கைது செய்யப்பட்ட மமதா பானர்ஜியின் அமைச்சரவை சகாக்கள் இருவர் உட்பட 4 பேருக்கு கொடுக்கப்பட்ட ஜாமினை கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக சிபிஐ நீதிமன்றம் இவர்கள் நால்வருக்கும் ஜாமின் வழங்கியிருந்தது. அதற்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், ஜாமினுக்கு தடை விதித்தது.


2014-ஆம் ஆண்டு நாரதா வழக்கு தொடர்பாக இன்று காலை 2 திரிணாமுல் அமைச்சர்கள் உட்பட 4 எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை சிபிஐ கைது செய்து விசாரிக்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது. இவர்களை உரிய அனுமதி பெறாமல் சிபிஐ கைது செய்துவிட்டதாக கூறி முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 6 மணிநேரம் வரை நடைபெற்ற இந்த தர்ணாவின் போது கொல்கத்தா சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே அதிகளவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அத்துடன் அவர்கள் சிபிஐ வளாகத்தின் பாதுகாப்பு காவலர்கள் மீது கற்களை எரிந்து தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவானது.