சுற்றுலாத்துறையானது பலரது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வியப்பூட்டும் இந்தியாவின் அதிசயங்களை மக்கள் மேலும் அனுபவிக்கும் வகையில் இந்தியாவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, "சுற்றுலா பலரது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு:
#IncredibleIndia வியப்பூட்டும் இந்தியாவின் அதிசயங்களை அதிகமான எண்ணிக்கையில் மக்கள் அனுபவிப்பதை உறுதிசெய்ய, இந்தியாவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் எங்கள் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும்" என பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்ட பதிவில், "ஒட்டு மொத்த உலகமும் பாரதத்தின் இண்டு இடுக்கை ஒரு நேரத்தில் பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும். பாரதத்தின் சுற்றுலாத் துறைக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நமது அரசு உலகத் தரத்திற்குச் சின்னச் சின்ன சுற்றுலா மையங்களை மேம்படுத்த, மூலதன முதலீட்டுக்கான மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான சிறப்பு உதவி (SASCI) திட்டத்தின் கீழ் 23 மாநிலங்களில் 40 திட்டங்களுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ரூபாய் 3,295.76 கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்கள் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தி, நிலையான சுற்றுலா மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும்.
தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட்:
பிரபலமான சுற்றுலா தளங்களின் நெரிசலைக் குறைத்தல், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல், நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல், உள்கட்டமைப்பு மற்றும் பார்வையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்த தனியாருடன் உடனான அரசின் கூட்டாண்மைகளை ஊக்குவித்தல் வரை, பாரதத்தின் இயற்கையில் திளைக்க விரும்பும் அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில், மகாபலிபுரத்தில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்க 99 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தென்னிந்திய சிரபுஞ்சியாக விளங்கும் நீலகிரியின் தேவாலாவில் மலர் தோட்டம் அமைக்க 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.