Amartya Sen Death: இந்தியாவை சேர்ந்த பொருளாதார வல்லுநரான அமிர்தியா சென், தனது 89வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானதாக வெளியான வதந்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர் நலமுடன் இருப்பதாக அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவரது மகள் நந்திதா சென் தன்னுடைய எக்ஸ் தளத்தில், " நண்பர்களே, தந்தை நலமுடன் உள்ளார். நாங்கள் அவருடன் கேம்பிரிட்ஜில் அற்புதமாக நாட்களை செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். ஹார்வர்டில் வாரத்திற்கு 2 வகுப்புகளை அவர் கற்றுத்தருகிறார்" என்று பதிவிட்டுள்ளார். 






நோபல் பரிசு வென்ற அமர்தியா சென்


அமர்தியா சென் கடந்த 1933ம் ஆண்டு அங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த, ஒருங்கிணைந்த பெங்காலில் சாந்திநிகேதன் எனும் பகுதியில் அமர்தியா சென் பிறந்தார். கல்லூரி காலத்திலேயே இவர் வாய்புற்று நோயால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து மீண்டு வந்து உயர்படிப்பை பூர்த்தி செய்தார். கடந்த 1972ம் ஆண்டு தொடங்கி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பேராசிரியாக பணியாற்றி வந்தார்.  அதன்படி, ஹார்வார்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் போன்ற உலகத்தரம் வாய்ந்த, பல்கலைக்கழகங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.


நலத்திட்டம் சார்ந்த பொருளாதாரம் மற்றும் சமூகத் தேர்வுக் கோட்பாட்டிற்கான அவரது பங்களிப்புகளுக்காகவும், சமூகத்தில் ஏழைகளின் பிரச்னைகளை நீக்குவதில் அவர் கொண்டிருந்த ஆர்வத்திற்காகவும் 1998 ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அமர்த்யா சென்னுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து 1999ம் ஆண்டு இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.


பொருளாதார வல்லுநராக மட்டுமின்றி, சிறந்த தத்துவவியலாளராகவும் அமர்தியா சென் திகழ்ந்தார்.  சர்வதேச நீதி, கல்வி மற்றும் சுகாதாரத்தில் சமூக சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடும் அவரது முன்னெடுப்பை பாராட்டி, கடந்த 2020ம் ஆண்டு ஜெர்மன் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் அமர்தியா சென்னுக்கு ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் அமைதிப் பரிசை வழங்கியது.