5 State Election 2023: நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படும் 5 மாநில தேர்தலில், யார் கைகள் ஓங்கியுள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். 


5 மாநில சட்டமன்ற தேர்தல்:


அடுத்த மாதம் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மிசோரத்தில் நவம்பர் மாதம் 7ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் மாதம் 17ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ஆம் தேதியும் மற்றும் தெலங்கானாவில் தெலுங்கானாவில் நவம்பர் மாதம் 30ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


சத்திஸ்கர்:


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களில் இரண்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் முதலாவது சத்திஸ்கர் மாநிலம். அங்குள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 70-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, கடந்த 2018ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது.  இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில்,  மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 45 முதல் 51 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, 39 முதல் 45 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதாகெவே கருதப்படுகிறது.


மிசோரம்: 


மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் மிகவும் சிறியது வடகிழக்கில் அமைந்துள்ள மிசோரம். அந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 40 மட்டுமே.  தற்போது மிசோ தேசிய முன்னணி கட்சியின் தனிப்பெரும்பான்மையில் நடைபெறும் ஆட்சியில், ஜுரம்தங்கா முதலமைச்சராக உள்ளார். மற்றொரு மாநில கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் எதிர்க்கட்சியாக உள்ளது.  இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அங்கு ஏபிபி சி வோட்டர் அங்கு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவில், மிசோ தேசிய முன்னணி கட்சி 13 முதல் 17 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கட்சி 10 முதல் 14 இடங்களும், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி 9 முதல் 13 தொகுதிகள் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த முறை மிசோரம் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கும் அங்கு நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மத்திய பிரதேசம்:


தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமாகவும், பாஜக ஆட்சி நடைபெறும் ஒரே மாநிலமாகவும் இருப்பது மத்தியபிரதேசம் மட்டுமே.  230 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த மாநிலத்தில், சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக உள்ளார். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அங்கு ஏபிபி சி வோட்டர் அங்கு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவில்,மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 113 முதல் 125 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும். ஆளுங்கட்சியான பாஜக, 104 முதல் 116 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்தியபிரதேசத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி அமையவே அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு தாவியதால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


ராஜஸ்தான்:


தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் இரண்டாவது மாநிலம் ராஜஸ்தான். அம்மாநில சட்டமன்றம் 200 உறுப்பினர்களை கொண்டுள்ளது. அதில், 121 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. அசோக் கெலாட் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அங்கு ஏபிபி சி வோட்டர் அங்கு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவில், மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 127 முதல் 137  தொகுதிகள் வரையில் பாஜக வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் 59 முதல் 69 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.  இதனால் அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதல், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


தெலங்கானா:


தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்திய மாநிலம் தெலங்கானா மட்டுமே. இந்த மாநில சட்டமன்றம் மொத்த 119 தொகுதிகளை கொண்டுள்ளது. பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.  காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அங்கு ஏபிபி சி வோட்டர் அங்கு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 48 முதல் 60 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் வெற்றிபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிஆர்எஸ், 43 முதல் 55 தொகுதிகளிலும் பாஜக, 5 முதல் 11 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடக தேர்தலில் தோல்வியுற்ற பாஜக, தெலங்கானா தேர்தலில் வெற்றி பெற்று தென்னிந்தியாவில் மீண்டும் ஆளுங்கட்சியாக காலூன்ற தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், சந்திரசேகர ராவிற்கு எதிரான ஓட்டுகள், காங்கிரசுக்கு ஆதரவாக மாறுவதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.