முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நேற்று  விடுதலை செய்யப்பட்ட 6 குற்றவாளிகளில் ஒருவரான நளினி ஸ்ரீஹரன், தன்னுடைய சிறை அனுபவம், பிரியங்கா காந்தி உடனான சந்திப்பு உள்ளிட்டவற்றை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.


தனியார் தொலைக்காட்சியான என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியில், சதித்திட்டத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், தனது கணவரின் நண்பர்களுடன் பழகியதால் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.


ராஜீவ் காந்தி கொலையில் அவரின் பங்கு, குண்டுவெடிப்பில் மற்றவர்களின் பங்கு குறித்து வருந்துகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, தான் குற்றமற்றவர் என்று அவர் கூறியுள்ளார்.


இதுகுறித்து மனம் திறந்த அவர், "உண்மையில் கொலையில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. நான் வழக்கில் குற்றவாளி என்று எனக்குத் தெரியும். ஆனால், என் மனதிற்கும், என் மனசாட்சிக்கும் என்ன நடந்தது என்று தெரியும்.


பிரதமரைக் கொல்லும் சதியில் நான் ஈடுபடவில்லை. ஆனால், சதி செய்த குழுவில் இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டேன். அவர்கள் என் கணவரின் நண்பர்கள். அதனால், அவர்களுடன் பழகினேன். நான் யாரிடமும் பொதுவாக பேசமாட்டேன். நான் அவர்களுடன் பேசியதில்லை. 


கடை, திரையரங்கு, ஹோட்டல், கோயில் ஆகிய இடங்களுக்கு செல்லும்போது அவர்களுக்குத் தேவைப்படும்போது நான் உதவி செய்தேன். நான் அவர்களுடன் செல்வது வழக்கம். அவ்வளவுதான். அது தவிர, எனக்கு எந்த தனிப்பட்ட தொடர்பும் இல்லை. அல்லது அவர்களின் குடும்பம், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது" என்றார்.


தனக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறித்து பேசிய அவர், "எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம் என எதிர்பார்த்தேன். ஏழு முறை தூக்கிலிடப்படுவதற்குத் தயாரானேன். ஏழு முறை கறுப்பு வாரண்ட் (மரணதண்டனைக்கான உத்தரவு) பிறப்பித்து எனக்காகக் காத்திருந்தார்கள்" என்றார்.


ராஜீவ் காந்தி மகள் பிரியங்கா காந்தி உடனான சந்திப்பு குறித்து நெகிழ்ந்த அவர், "அவர் மிகவும் அன்பான நபர். அவர் ஒரு தேவதை. அவர் என்னை நானே மதிக்கும்படி செய்தார். ஏனென்றால் நாங்கள் சிறையில் சரியாக நடத்தப்படவில்லை. அதிகாரிகள் முன் உட்காரக்கூட எங்களை அனுமதிக்கவில்லை. நின்று பேச வேண்டியிருந்தது. 


ஆனால், அவர் என்னை சந்திக்க வந்ததும் என்னை தன் அருகில் உட்கார வைத்தார். அது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தந்தையின் கொலையைப் பற்றி அவர் என்னிடம் கேட்டார். அவர் தன் தந்தைக்காக உணர்ச்சிவசப்பட்டு அழுதார்" என்றார்.


லண்டனில் மருத்துவராக உள்ள மகள் ஹரித்ராவுடன் இணைவது குறித்து பேசிய அவர், "அவர் என்னை முழுவதுமாக மறந்துவிட்டார். நான்தான் அவரைப் பெற்றெடுத்தேன். ஆனால், இரண்டு வயதுக்குப் பிறகு அவரை பிரிந்தேன். எனவே, அவர் நான் யார் என்பதை முற்றிலும் மறந்துவிட்டாள். இப்போது நடந்ததை மீட்டெடுக்க முயற்சிக்கிறோம்.


நானும் அவரும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளோம். நாங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டோம். எங்களால் இப்போது விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். ஆனால், அவர் வயதில் மிகச் சிறியவர். என்ன நடக்கிறது என்று அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால், என் மகள் மிகவும் சிரமத்தில் உள்ளார்" என்றார்.,


1992 ஆம் ஆண்டு சிறையில் பிறந்த நளியின் மகள், பின்னர் உறவினர்களால் வளர்க்கப்பட்டார். 2019 இல், அவருக்கு திருமணமானபோது, ​​நளினி அதில் கலந்துகொள்ள ஒரு மாதம் பரோல் பெற்றது குறிப்பிடத்தக்கது.