சிக்கிமில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சமீபத்தில் ‘நைரோபி ஃப்ளைஸ்’ எனப்படும் ஒருவகை ஆசிட் பூச்சியால் தாக்கப்பட்டதால் கடுமையான தோல் நோய்த்தொற்றுக்கு ஆளாகினர். பூச்சியால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர், மற்ற பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு இப்போது குணமடைந்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
பிரஸ் ட்ரஸ்ட் செய்தியின்படி, கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த நைரோபி ஈக்கள், சிக்கிம் மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (SMIT) வளாகத்தில் மஜிதாரில் வேகமாக வளர்ந்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிக்கிம் மக்கள்
நைரோபி ஈக்கள் கென்ய ஈக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை சிறிய, வண்டு போன்ற பூச்சிகள் மற்றும் மிக நீண்ட உடல்களை கொண்டவை. ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும் இவை அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. அவை ஒளி மற்றும் ஈரமான பகுதிகளால் ஈர்க்கப்படுகின்றன.
இந்த ஈக்கள் பொதுவாக பயிர்களை அழித்து பூச்சிகளை உண்ணும். இந்த ஈக்கள் கடிக்காது, கொட்டாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், யாருடைய தோலில் அமர்ந்தாலும் தொந்தரவு ஏற்பட்டால், அவை தீக்காயங்களைப் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் வாய்ந்த அமிலப் பொருளை வெளியிடுகின்றன.
நமக்குக் கிடைத்த தகவலின்படி, இந்த தீக்காயங்களை ஏற்படுத்தும் நச்சு 'பெடரின்' என்று அழைக்கப்படுகிறது. இது நைரோபி ஈக்களுக்குள் வாழும் சிம்பயோடிக் பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பூச்சிகள் வெளியிடும் திரவம் தோலில் அசாதாரண தீக்காயங்கள், தோல் அழற்சி அல்லது புண்களை ஏற்படுத்தும்.
கொப்புளங்கள் 24 முதல் 48 மணி நேரத்தில் வெடிக்கலாம், ஆனால் இவை பொதுவாக உலர்ந்து வடுக்களை ஏற்படுத்தும். நச்சு உடலில் அதிகமாக பரவி காய்ச்சல், நரம்பு வலிகள், மூட்டு வலிகள் அல்லது வாந்தியெடுத்தல் போன்றவற்றை உண்டாக்கினால் மிகவும் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். நச்சுகள் மக்களின் கண்களுடன் தொடர்பு கொண்டால், அது வெண்படல அழற்சி மற்றும் தற்காலிக குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.
ஈக்களை மெதுவாக விரட்ட வேண்டும் என்றும் அவற்றை தொந்தரவு செய்யவோ, தொடவோ கூடாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஈக்கள் அமரும் பகுதியையும் சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும்.
படுக்கை வலைகள் போடுவது, நீண்ட கை ஆடைகள் உடுத்துவது மற்றும் இரவில் விளக்குகளின் கீழ் உட்காருவதைத் தவிர்ப்பது போன்றவையும் உதவும். தோல் வீக்கத்தை ஏற்படுத்தும் வலுவான விஷம் இருப்பதால் இந்த ஈயை நசுக்கக்கூடாது.