ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நாக்பூரில் நடைபெற்ற அந்த அமைப்பின் பயிற்சியில் பேசினார். அவர் அப்போது சில கருத்துகளை முன்வைத்தார். அதன்படி, “இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவும் போது பல சிலைகள் மற்றும் கோயில்கள் தாக்கப்பட்டன. 


அதில் குறிப்பாக இந்து கோயில்கள் பல தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. அதற்காக இந்துக்கள் அனைவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி அழிக்கப்பட்ட சில கோயில்கள் மீண்டும் புணரமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக உள்ளது. நாங்கள் ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் கூறியது போல் இனிமேல் ராம ஜன்ம பூமி போன்ற போராட்டங்கள் எதையும் நாங்கள் முன்னெடுக்க போவதில்லை. வரலாற்றை யாரும் மாற்ற முடியாது. ஏனென்றால் வரலாற்றை இப்போது இருக்கும் இந்துக்களோ அல்லது இஸ்லாமியர்களோ உருவாக்கவில்லை. கியான்வாபி-காசி விஸ்வநாதன் கோயில் பிரச்னை இரு தரப்பு ஒப்புதலுடன் தீர்வு காண வேண்டும்.


எதற்காக அனைத்து மசூதிகளில் சிவலிங்களை தேடி கொண்டு இருக்கிறீர்கள்?. எதற்காக சில பிரச்னைகளை பெரிதாக மாற்றுகிறீர்கள். இந்தியர்கள் அனைவரும் ஒரே முன்னோர்களை உடையவர்கள் என்பதற்காக ஒரே மதம் மற்றும் ஒரே மொழியை நாம் பின்பற்றவில்லை. நம்முடைய நீதித்துறையின் தீர்ப்புகளை நாம் புனிதமாக கருதி மதிக்க வேண்டும். மேலும் அதை கேள்வி எழுப்ப கூடாது” எனத் தெரிவித்தார். 


கியான்வாபி பிரச்னை:


உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அருகே அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. முகலாய மன்னர் அவுரங்கசிப் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதியில் இந்துக் கோயில் இருப்பதாகவும், எனவே இங்கு வழிபட தங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி இந்து பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மசூதியில் வீடியோ ஆதாரத்துடன் கள ஆய்வு செய்ய கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இதற்கு மசூதி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


மூன்று நாள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து பெண்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் நீதிமன்றத்தில் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை சீல் வைத்து மூட வாரணாசி நீதிமன்றம்  உத்தரவிட்டது. அதே சமயத்தில், அங்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண