கர்நாடக மாநிலம் மைசூருவில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நரசிங்கபுரத்தில் இன்னோவா கார், பேருந்து நேருக்கு நேர் மோதி கொண்டதில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இன்னோவா காரில் இருந்து ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், மோசமாக சேதம் அடைந்த காரில், உயிரிழந்த பயணிகளின் உடல் சிக்கியிருப்பதை காணலாம். காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


சமீப காலமாகவே, பெங்களூரு-மைசூர் விரைவுச் சாலையில் விபத்து நடப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதிதான், பிரதமர் மோடி, பெங்களூரு-மைசூர் விரைவுச் சாலையை திறந்த வைத்தார். திறந்து வைக்கப்பட்ட அதே நாளிலேயே மத்தூர் அருகே விபத்து நடந்தது.


விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் கடந்த 6 மாதங்களில் 335க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு 84க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாலை விதிகளை மதிக்காமல் வாகனகத்தை இயக்குதல், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல், அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்டவை காரணமாக அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.


தொடர்ந்து அதிகரிக்கும் விபத்துகள்:



இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.


2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021ஆம் தமிழ்நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர்.


இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.


2021ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,28,825, மாநில நெடுஞ்சாலைகளில் 96,382, மற்ற சாலைகளில் 1,87,225 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 56,007, மாநில நெடுஞ்சாலைகளில் 37,963, மற்ற சாலைகளில் 60,002 பேர் மரணம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் 1,17,765, மாநில நெடுஞ்சாலைகளில் 92,583, மற்ற சாலைகளில் 1,74,100 பேர் காயம் அடைந்துள்ளனர்.