டெல்லியில் 16 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான சாஹிலை டெல்லி காவல்துறை இன்று கைது செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், தேசிய தலைநகர் டெல்லியில் மற்றொரு கொடூரம் அரங்கேறியுள்ளது.


ஷ்ரத்தா கொலை வழக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியே தணியாத சூழலில், 16 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


நடந்தது என்ன?


நேற்று, ஷஹபாத் டெய்ரி என்ற பகுதியில் 16 வயது சிறுமியை சாஹில் என்ற 20 வயது இளைஞர் சரமாரியாக தாக்கியுள்ளார். தெருவில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு இளைஞர் சாஹில் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த சிறுமியை குத்தியுள்ளார்.


ஆத்திரம்  தாங்காமல் மீண்டும் அந்த சிறுமியை ஈவு இரக்கமின்றி சுமார் 20 முறை கொடூரமாக குத்தியுள்ளார். இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


பின்னர், அந்த இடத்தில் இருந்து சற்று தூரம் சென்ற இளைஞர், ஆத்திரம் தீராததால் மீண்டும்  ஓடி வந்து அருகில் கிடந்த கல்லை எடுத்து அந்த சிறுமி  மீது போட்டுள்ளார். இதற்கிடையில் அந்த தெருவில் இருக்கும் அனைவரும் வேடிக்கை பார்த்தப்படியே இருந்துள்ளனர். அந்த இளைஞர் சிறுமியை கொடூரமாக தாக்கிக் கொண்டிருக்கும்போது ஒருவர் கூட அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தப்படி நின்றுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், "இருவரும் காதலித்துள்ளனர். ஆனால், நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது நண்பரின் குழந்தை பிறந்தநாளில் கலந்து கொள்ள அந்த இளம்பெண் திட்டமிட்டிருந்தார். பிறந்தநாள் விழாவுக்கு செல்லும் வழியில் தான் கொலை நடந்துள்ளது" என்றார்.


அதிரடி காட்டிய டெல்லி காவல்துறை:


இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாட்டின் தலைநகரில் நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்தவில்லை என்றால் மற்ற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர்.


இந்த சூழ்நிலையில், அதிரடியில் இறங்கிய டெல்லி காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட இளைஞரான சாஹிலை கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் வைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த கொலை சம்பவத்தை கண்டித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் மைனர் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். மிகவும் வருத்தம் அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளிகள் அச்சமற்றவர்களாகிவிட்டனர். காவல்துறை மீது பயம் இல்லை. துணை நிலை ஆளுநர் சார், சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பு. தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.