கொவிட் இரண்டாம் அலை பரவலில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக குழந்தைகள்  மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 


குழந்தைகள் மருத்துவ நிபுணர் சுபாஷ் ராவ் ஆங்கிலேயே ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் " முதல் பரவலை விட கொவிட் இரண்டாம் அலையில்  குழந்தைகளை அதிகம் பாதிக்கப்படுவதாக  அறியப்படுகிறது. தற்போது வித்தியாசமான போக்கு காணப்படுகிறது.  கொரோனா அறிகுறிகளை தற்போது குழந்தைகள் தான் முதலில் உருவாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து தான் பெரியவர்களுக்கு  கொரோனா அறிகுறிகள் தென்படுகிறது. ஆனால், முதல் பரவல் காலகட்டங்களில் பெரும்பாலான குழந்தைகள் அறிகுறியற்ற அறிகுறியற்ற கொவிட் பாதிப்புகளை கொண்டிருந்தனர். இரண்டாவது பரவலில் அநேக குழந்தைகளிடம் காய்ச்சல், சளி, வறட்டு இருமல்,   வாந்தி,பசியிண்மை, சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படுகிறது"என்று அவர் கூறினார்.   


அறிகுறிகளை உருவாக்கிய குழந்தைகள் இருமும் போதும், தும்மும் போதும் நம் வாயையும் மூக்கையும் மூடிக் கொள்வது தொற்றைக் குறைக்க உதவும். ஒட்டு மொத்த பாதிப்புக் காலம் வரை, பாதிக்கப்பட்ட நபரின் சளி, கோழை, மலம் ஆகியவற்றில் இந்த வைரஸ் இருக்கும் என்றும் தெரிவித்தார்.  


கோவிட் -19 நோய்த்தொற்று அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்பட்டால், இரண்டு நாளைக்குள் ஆர்டி பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறித்தினார்.   


இந்தியாவில் அன்றாட புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு (1,03,558) புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், கர்நாடகா,உத்தரப் பிரதேசம், தில்லி, மத்தியப் பிரதேசம், பஞ்சாப்  ஆகிய எட்டு மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்தியாவில் 45 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு தற்போது வரை கொரோனா தடுப்பு மருந்து நிர்வகிக்கப்படுகிறது.    


முன்னதாக, மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பின் கீழ் (INSACOG) 10 தேசிய பரிசோதனைக் கூடங்கள் அடங்கிய குழுவை  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அமைத்தது.  


மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய 10,784 கொவிட் வைரஸ் மாதிரிகளில், 771 மாதிரிகள் மரபியல் வேறுபாடுகளுடன் இருந்தது கண்டறியப்பட்டது.


இவற்றில் 736 மாதிரிகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்.  34 மாதிரிகள் தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகையைச் சேர்ந்தது. ஒரே ஒரு மாதிரி, பிரேசிலில் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரி.  இந்த மாறுபட்ட வைரஸ் மாதிரிகள், 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


மேலும், மகாராஷ்ராவில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்ப்பட்டதில், E484Q and L452R என்ற புதுவகையான வைரஸ் மாதிரிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த மாறுபாடுகள் உலகில் எந்த பழைய மாதிரிகளுடன் ஒத்துப் போகவில்லை. இந்த மாறுபாடுகளுடன் கூடிய வைரஸ், பாதிப்பை அதிகரிக்கச் செய்தன.  15 முதல் 20 சதவீத மாதிரிகளில் இந்த மாறுபாடுகள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. 


பாதிக்கப்பட்ட யாரும் 10 முதல் 14 நாட்கள் தங்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் நோய்த் தொற்றுக் பரவலாக குறைக்கலாம் என உலக சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.