இந்தியாவிலே மக்கள் அதிகளவில் வசிக்கும் நகரங்களில் முக்கிய நகரமாக இருப்பது மும்பை. மும்பையில் ரயில்வே சேவையை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள பரபரப்பான ரயில் நிலையங்களில் சீவ்ரி ரயில் நிலையமும் ஒன்றாகும்.
இந்த நிலையில், இந்த ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 11.45 மணியளவில் விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் ரயில் வருவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். உடனே அவர் தண்டவாளத்தில் வந்து அமர்ந்து கொண்டார். பின்னர், இரண்டு தண்டவாளத்திற்கும் இடையில் படுத்துக்கொண்டார்.
இதைக்கண்ட ரயிலின் எஞ்சின் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட ரயில் எஞ்சின் டிரைவர் உடனடியாக, ரயிலின் எமெர்ஜென்சி பிரேக்கை அழுத்தியதால். அந்த நபருக்கு சுமார் 10 அடி முன்பாகவே ரயில் நின்றுவிட்டது. அதற்குள் அங்கிருந்த ரயில்வே போலீசார் இதைக்கண்ட உடனே ஓடிவந்தனர். அவர்கள் விரைந்து வந்து ரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை உடனே அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இந்த காட்சியை ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், அந்த வீடியோவிற்கு மேலே “மோட்டார்மேனின் சிறந்த பணி. மும்பையில் உள்ள சீவ்ரி ரயில் நிலையத்தில் ஒரு நபர் தண்டவாளத்தில் படுத்திருப்பதை மோட்டார்மேன் பார்த்தார். அவர் அந்த நபரை காப்பாற்றுவதற்காக நிலைமையை புரிந்துகொண்டு எமெர்ஜென்சி ப்ரேக்கை உடனே அழுத்தினார். உங்கள் உயிர் முக்கியம். உங்களுக்காக யாரோ வீட்டில் காத்திருப்பார்கள்.” எனத் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை சுமார் 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். பலரும் அந்த எஞ்சின் டிரைவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : 'எனக்காகத்தான் செத்தார்களா?’ : "பிரதமருக்கு திமிர்" : சந்திப்பு சண்டையில் முடிந்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்திய மேகாலயா ஆளுநர்...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்