இந்தியா உலகின் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்று அதன் மொத்த உற்பத்தியின் அடிப்படையிலும், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்று அதன் மொத்த வாங்கும் சக்தியின் அடிப்படையிலும் குறிக்கப்படுகிறது.
இந்திய நகரங்கள் அவற்றின் தனித்தனி மொத்த உற்பத்தியின் அடிப்படையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகின்றன. மொத்த உற்பத்தி அளவின் அடிப்படையில், இந்தியாவின் டாப் 10 நகரங்களைப் பற்றி இங்கு காண்போம்.
1. மும்பை
இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை இந்தப் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. ஆண்டுக்கு சுமார் 310 பில்லியன் அமெரிக்க டாலர்களை உற்பத்தி செய்யும் மும்பை நகரம் இந்தியாவின் மிகப்பெரிய நகரமாக இருப்பதோடு, டாடா குழுமம், ரிலையன்ஸ் தொழிற்சாலை, ஆதித்யா பிர்லா குழுமம் முதலான இந்தியாவின் பிரதான நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களைக் கொண்டிருக்கிறது. மேலும் இங்கு ரிசர்வ் வங்கி, தேசிய பங்குச் சந்தை முதலான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் இருக்கின்றன.
2. டெல்லி
இந்தியாவின் பணக்கார நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பெறுகிறது நாட்டின் தலைநகரான டெல்லி. இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களுள் முதலிடம் பெற்றுள்ள டெல்லியில் மொத்த உற்பத்தி சுமார் 293 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் தலைநகராக டெல்லி இருப்பதால், இங்கு பிரதான அரசியல் தலைவர்கள் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் முதலானோர் இங்கு வாழ்கின்றனர்.
3. கொல்கத்தா
பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்த கொல்கத்தாவுக்குப் பணக்கார நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ஐடிசி லிமிடெட், பிரிட்டானியா, கோல் இந்தியா முதலான பெரு நிறுவனங்களின் தலைமையகங்கள் உள்ளன. கொல்கத்தாவின் மொத்த உற்பத்தி சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
4. பெங்களூரூ
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் பெங்களூரூ இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட சுமார் 8 பேர் பெங்களூரூவில் வாழ்கின்றனர். மேலும், நாட்டின் பிரதான உற்பத்தி தொழிற்சாலைகளும் இங்கு இயங்குகின்றன. பெங்களூரூவின் மொத்த உற்பத்தி மதிப்பு சுமார் 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
5. சென்னை
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அதிகம் பங்களிப்பு செலுத்தி வரும் சென்னை நகரம் இந்தப் பட்டியலில் ஐந்தாவது பணக்கார நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 78.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
6. ஹைதராபாத்
முத்துகளின் நகரம் என்றழைக்கப்படும் ஹைதராபாத் அதன் வரலாறு, உணவுப் பழக்கம், பன்முக கலாச்சாரம் முதலான சிறப்பம்சங்களுக்காக புகழ்பெற்றது. சுமார் 75.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை உற்பத்தி செய்யும் ஹைதராபாத் நகரம், இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
7. பூனே
சுமார் 69 பில்லியன் அமெரிக்க டாலர்களை உற்பத்தி செய்யும் பூனேவுக்கு, இந்தப் பட்டியலில் ஏழாவது இடம். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவால் `கிழக்கின் ஆக்ஸ்போர்ட்’ என்று வர்ணிக்கப்பட்ட பூனேவில் பல்வேறு பிரபல கல்வி நிறுவனங்கள் இருப்பதால், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் இங்கு வருகை புரிகின்றனர்.
8. அகமதாபாத்
`கிழக்கின் மான்செஸ்டர்’ என்றழைக்கப்படும் அகமதாபாத், சுமார் 68 பில்லியன் அமெரிக்க டாலர்களை உற்பத்தி செய்து, இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் மிக வேகமாக வளரும் நகரங்களுள் அகமதாபாத் இடம்பெற்றுள்ளது.
9. சூரத்
வைரம், பின்னலாடை முதலான தொழில்களை ஊக்குவித்து, சுமார் 59.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மொத்த உற்பத்தியை ஈட்டும் சூரத் நகரம் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
10. விசாகப்பட்டினம்
கடற்கரை நகரமாக இருக்கும் விசாகப்பட்டினம் சுற்றுலா தளமாகவும், மருந்து உற்பத்தி துறையிலும் பிரபலமானது. சுமார் 43.5 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த உற்பத்தியை உருவாக்குகிறது இந்த நகரம்.