சொமேட்டோ டெலிவரி செய்யும் ஒருவர் லிப்டில் உணவு டெலிவரி செய்யவேண்டிய வீட்டிற்கு வந்த போது அந்த வீட்டில் வளர்க்கப்படும் ஒரு ஜெர்மன் ஷெஃபர்டு நாய் அவரது அந்தரங்க பகுதியில் கடித்த விடியோ வைரலாகி வருகிறது. அவர் தற்போது நவி மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்தரங்கத்தில் கடித்த நாய்
நரேந்திர பெரியார் என்று முரணான பெயர் கொண்ட இவர் சொமேட்டோ நிறுவனத்தின் ஃபுட் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல இவர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி மும்பையின் பன்வேலில் உள்ள இந்தியாபுல்ஸ் க்ரீன்ஸ் மேரிகோல்டில் உணவு டெலிவரி செய்ய ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது லிப்டில் ஏறி இறங்குகையில் ஒரு நாயை கயிறு கட்டி பிடித்தபடி ஒருவர் லிப்டில் காத்திருந்தார். அவரை பார்த்து கோபமடைந்த நாய், ஒரே தாவாக தாவி அவரது அந்தரங்க பகுதியில் கடித்தது.
சிகிச்சை
இதனால் காயமடைந்த அவர் கமோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போதும் வலி குறையாததால் நவி மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மருத்துவ செலவுகள் அனைத்தையும் நாயை வளர்க்கும் நபரே பார்த்துக்கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
வைரலான விடியோ
வெளியாகியுள்ள வைரல் விடியோவில், லிப்டின் சிசிடிவி கேமரா வீடியோவும், அவர் பார்க்கிங்கில் நின்று வலியுடன் துடிக்கும் வீடியோவும் இடம்பெற்றுள்ளது. முதல் க்ளிப்பில் அவர் லிப்டை திறக்க, அங்கு நிற்கும் நாய் அவரை பார்த்து தாவுகிறது, அதனை பார்த்து நாயை வளர்ப்பவர் பின்னால் இழுக்கிறார். மீண்டும் முன்னேறி வந்த நாய் ஒரு சில நொடிகளில் அவரின் அந்தரங்க உறுப்பில் கடித்தது. அதோடு கட் ஆன விடியோ கீழே பார்க்கிங்கில் அவருடைய மொபைல் கேமராவில் எடுத்தது போல துவங்குகிறது. அதில் அவருடைய வெள்ளை நிற கால்சட்டையில் ரத்தம் தெளிவாக தெரிகிறது. கைவைத்து பார்த்து வலி தாங்க முடியாமல் துடிக்கிறார்.
நொடி பொழுதில் நடந்துவிட்டது
இதுகுறித்து பேசிய பெரியார், "என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொள்வதற்குள், நொடி நேரத்தில் என்னை நாய் கடித்துவிட்டது. முதலில் ஒன்றும் ஆகவில்லை என்றுதான் நினைத்தேன். பார்க்கிங்கிற்கு சென்றதும்தான் எனக்கு வலிக்க ஆரம்பித்தது, அப்போதுதான் ரத்தம் கொட்டுவதை பார்த்தேன் என்றார். நாய் உரிமையாளர்கள் தங்கள் ஆக்ரோஷமான நாய்களின் கழுத்தை இறுக்குவதும் கழுத்தை அடைப்பதும் நாய் உரிமையாளர்களின் பொறுப்பு என்று அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆர்வலர்கள் நம்புகிறார்கள் என்று ஒரு செய்துதாள் மேற்கோளிட்டுள்ளது. காசியாபாத்தில் இந்த மாத தொடக்கத்தில் இதேபோல லிப்டில் ஒரு சிறுவனை வளர்ப்பு நாய் கடித்தது குறிப்பிடத்தக்கது.