உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உணவகத்தில் எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட சமையல்காரரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.


காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல்காரர் ஒருவர் சப்பாத்தி சுடும் வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அந்த சமையல்காரர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி அதை அடுப்பின் மீது வைத்து சூடுகிறார். இதனை கடைக்கு சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீதும் சமையகாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் வீடியோவில் உள்ள உணவகம் எந்த பகுதியை சேர்ந்தது என விசாரித்து வந்தனர்.


 






இறுதியாக அந்த உணவகம் டெல்லி அருகே அமைந்து உள்ள நகர் கோட்வாலி பகுதியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து வீடியோவில் இருந்த கடையை அடையாளம் கண்ட போலீசார் அங்கு சென்று விசாரித்து உள்ளனர். அப்போது, வீடியோவில் இருந்த தமீசுதீன் என்ற சமையகாரரை பார்த்த உத்தரப் பிரதேச போலீசார் கையோடு அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.


சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட 59 வினாடி வீடியோ குறித்தும், ஏன் எச்சில் தொட்டு சப்பாத்தி செய்தீர்கள் என்பது குறித்தும் காவல் துறையினர் அந்த சமையல்காரரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கைதான சமையல்காரர் தமீசுத்தீன் பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் என்றும் வருமானத்துக்காக உத்தரப் பிரதேசத்தில் தங்கி இருந்து உணவகத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.


இது குறித்து போலீசார் அளித்துள்ள தகவலில் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பஞ்சவதி பகுதியின் அஹிம்சா வாதிகாவில் அமைந்து இருக்கும் சிக்கன் பாயிண்ட் என்ற உணவகத்தில் தமீசுத்தீன் சமையல்காரராக பணிபுரிந்து வருவதாகவும், தினசரி தந்தூரி ரொட்டி சுடுவது அவரது வேலை எனவும் தெரிவித்து உள்ளனர். இந்து ரக்‌ஷா தளம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கவுரவ் சிசோதியா, உணவகத்தை நடத்தி வரும் சதாப், சாஹில் மற்றும் தமீசுத்தீன் மீது காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.


இதற்கு முன்னதாக இதே காசியாபாத்திலும், டெல்லி, மீரட், குருகிராம், ஹாபூரிலும் எச்சில் தொட்டு சப்பாத்தி, ரொட்டி சுட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.