மஹாராஷ்டிராவில் எலிகள் இழுத்துச் சென்ற தங்க நகைகள் இருந்த பையை போலீசார் மீட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வசிப்பவர் சுந்தரி. இவர் நேற்று தனது நகைகளை அடகுவைக்க வங்கிக்கு சென்ற போது வழியில் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். இதனையடுத்து வங்கிக்கு சென்ற சுந்தரி நகைகளை அடகு வைக்க பையை பார்த்த போது, நகைகள் வைத்திருந்த பை காணாமல் போனது குறித்து அதிர்ச்சியடைந்தார். 




இதனையடுத்து நின்று யோசித்தபோது, நகைகள் வைத்திருந்த பையை உணவு பை பைக்குள் வைத்தது நியாபகத்திற்கு வந்தது. உடனே அவர் குழந்தைகள் இருந்த இடத்திற்கு சென்றார். ஆனால் குழந்தைகள் அங்கு இல்லை. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தைகள் பையை குப்பையில் வீசியது தெரியவந்தது. ஆனால் குப்பையை கிளறி பார்த்த போது, அங்கு பை இல்லை.


இதனையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, எலிகள் அந்தப் பையை சாக்கடைக்கு இழுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து துப்புரவு பணியாளர்கள் வரவழைத்து, சாக்கடைக்குள் தேடிய போது நகைகள் இருந்த பை கிடைத்தது. அதில் இருந்த  நகைகளை போலீசார் சுந்தரியிடம் ஒப்படைத்தனர். அவற்றின்  மதிப்பு 5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.