பாலிவுட்டின் பிரபல நடிகரும், இந்தியாவின் திரை நட்சத்திரங்களில் முக்கியமானவர் அமிதாப்பச்சன். அவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு மும்பை காவல்துறையினருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலும், பைகுல்லா மற்றும் தாதர் ரயில் நிலையங்களிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.




உடனடியாக, காவல்துறையினர் அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அதிகாரிகளை உஷார்படுத்தினர். உடனடியாக சத்ரபதி ரயில் நிலையத்திலும், பைகுல்லா ரயில் நிலையம் மற்றும் தாதர் ரயில் நிலையத்திலும் அரசு ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், இந்த பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன.


மேலும், அமிதாப்பச்சன் வீட்டிலும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீசார் உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் சோதனையின் இறுதியில் ரயில்நிலையங்களிலும், அமிதாப் பச்சன் வீட்டின் அருகிலும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், மும்பை காவல்துறைக்கு வந்த அழைப்பு வதந்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து, காவல்துறையினருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர். காவல்துறைக்கு அழைப்பு வந்த மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்தபோது அந்த அழைப்பு தானே மாவட்டம் மும்பரா பகுதிகளில் உள்ள ஷில்படா பகுதியில் இருந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மராத்வடா பகுதியில் வாகன ஓட்டுநராக இருப்பவர் என்பதை கண்டறிந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவருடன் இணைந்து போலீசாருக்கு மிரட்டல் விடுத்த மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்தனர்.


நாட்டின் முக்கிய மாநிலங்களில் ஒன்றாக திகழ்வது மகாராஷ்ட்ரா. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் கடந்த காலங்களில் பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள், தீவிரவாத நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் 24 மணிநேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அடுத்த வாரம் சுதந்திர தினம் நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 




இந்த நிலையில், அமிதாப்பச்சன் வீடு மற்றும் மும்பையில் மக்கள் அதிகம் கூடும் ரயில்நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சிறிதுநேரம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ட்ரோன் மூலமாக வெடிபொருட்கள் அனுப்ப முயற்சிக்கப்பட்டதும், அதை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியும் குறிப்பிடத்தக்கது.