பொது வெளியில் ஆண் ஒருவரை செயல் இழந்த, ஆண்மையற்ற மனிதன் என்று பெயரிட்டு அழைப்பதையும், களங்கம் சுமத்துவதையும், அவாமானப்படுத்துவதையும் எளிதாக கடந்து செல்ல முடியாது என்று மும்பை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மும்பை பந்தர்பூர் நகரில், நந்து என்று கூலித் தொழிலாளிக்கு திருமணம் முடிந்தது. இவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஆனால், சில கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து நிலையம் ஒன்றில் பேருந்துக்காக காத்திருந்த சகுந்தாலா, அந்த வழியே வந்த நந்துவை சந்தித்திருக்கிறார். தன்னையும், தனது குழந்தைகளையும் காக்கமுடியாத சூழலை நினைத்தும், சில முந்தைய அவமானங்களை மனதில் வைத்துக் கொண்டும் நந்துவை சரளமாக வசைப்பாட ஆரம்பித்திருக்கிறார். குறிப்பாக, நீ ஒரு செல்லாக் காசு. செயல் இழந்தவன்... ஆண்மையற்றவன்.... உன்னை ஒதுக்கி வைத்துவிட்டு, மற்றொருவருடன் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளேன்" என்று கடுமையான சொற்களை பயன்படுத்தியுள்ளார். மேலும், நந்துவின் சட்டையைப் பிடித்து நேரடி மோதலிலும் ஈடுபட்டிருக்கிறார்.
மிகவும் ஆள்நடமாட்டம் உள்ள சாலையில்,பலர் கூடியிருக்கும் பேருந்து நிலையத்தின் முன்பு தனக்கு நேர்ந்த களங்கத்தை நினைத்து நந்து அமைதியை இழந்திருக்கிறார். அப்போது, ஏற்பட்ட மன அதிர்ச்சி அவரை நிலைகுழைய செய்துள்ளது. ஆத்திரமடந்த அவர், பேருந்து நிலையத்தில் வைத்தே சகுந்தலாவை தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் மிகவும் படுகாயமடைந்த சகுந்தலா உயிரிழந்தார். இதனையடுத்து, நந்துவை கைது செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஆனைவரும் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், நீதிபதிகள் சாதனா ஜாதவ் மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், "குற்றவாளிக்கு திருமணாகிவிட்டது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. அந்த துரதிர்ஷ்டவசமான தினத்தன்று, மறைந்த சகுந்தலா பொது வெளியில் நின்றுக் கொண்டு திட்டவும், அவமதிக்கவும் தொடங்கியுள்ளார். இது, மிகவும் சித்ரவதையான செயல். கிண்டலுக்கு உள்ளான குற்றவாளி உணர்வு ரீதியான மன அதிர்ச்சியையும் எதிர் கொண்டிருக்கிறார் என்பது சாட்சியங்களின் மூலம் தெரிய முடிகிறது.
பொது வெளியில் வைத்து ஆண்மையற்றவன் என்று கேட்ட பின்னர், குற்றவாளியால் அமைதி அடைய முடியவில்லை. இது, முத்திரை குத்துவது போன்றது. எனவே, வேண்டுமென்றே செய்யப்பட்ட திட்டமிட்ட கொலை இல்லை என்பது நிரூபனமாகிறது. அவர் மரணம் விளைவிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் (intention ) தாக்கவில்லை. ஏற்கனவே, 12 ஆண்டுகள் சிறையில் தண்டனை பெற்ற காரணத்தினால் அவரை, இந்த நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிடுகிறது” என்று தெரிவித்தனர்.