கென்யாவின் முன்னாள் பிரதமரம், ஆப்ரிக்க ஒன்றியத்துக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை உயர் அதிகாரியுமான ரெய்லா ஒடிங்காவின் புதல்வி ரோசிமேரிக்கு கேரள ஆயுர்வேத சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.
ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு, கடந்த 2017ல், திடீரென ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சீனா என உலகின் பல்வேறு நாடுகளிலும் சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும், எந்த பலனையும் அளிக்கவில்லை. இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சுமார் 46 கி.மீ தொலைவில் உள்ள கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவெடுத்தனர். 2019ல், ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்ற பின் பார்வை மேம்பட்டதும், ரோஸ்மேரி கென்யா திரும்பினார். தொடர்ந்து ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்ட அவருக்கு, இழந்த பார்வை கிடைத்ததாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆயிரிகணக்கான மக்களுக்கும் ஆயர்வேத சிகிச்சை மூலம் கண் பார்வையை பரிசாக அளித்துள்ளது. ஆயுர்வேத சிகிச்சை முறையை அடித்தளமாகக் கொண்டிருந்தாலும், அதிநவீன நோய் கண்டறியும் பிரிவு, மற்றும் பரிசோதனைக் கூடங்கள் மற்றும் பிசியோதெரபி, ஆடியோமெட்ரி உள்ளிட்ட அதிநவீன மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதல்விக்கு இழந்த கண் பார்வை மீண்டும் கிடைத்தது குறித்தும், இந்திய ஆயுர்வேத மருத்துவமனையில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்தும், ரெய்லா ஒடிங்கா அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி நாட்டு மக்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆயுர்வேத மருத்துவ முறை நன்கு பலனளிக்கிறது. இந்திய ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று அவர் கூறினார்.
தற்போது, வழக்கமான உடல் பரிசோதனைகாக ரெய்லா ஒடிங்கா குடும்பத்துடன், சில தினங்களுக்கு முன்பு கூத்தாட்டுக் குளம் வந்தார். அவரை ஸ்ரீதரீயம் தலைமை மருத்துவர் டாக்டர் நாராயணன் நம்பூதிரி, துணைத்தலைவர் ஹரி நம்பூதிரி, சி.இ.ஓ., பிஜூ நம்பூதிரி ஆகியோர் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர்.
தலைமை மருத்துவர் டாக்டர் நாராயணன் நம்பூதிரி கூறுகையில், '' 300 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளித்து வருகிறோம். நவீன மருத்துவ வசதிகளை இணைத்து ஆயுர்வேத சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறோம். ரோஸ்மேரிக்கு மூளை ரத்தக்குழாயில் ஏற்பட்ட திடீர் அடைப்பால் இடது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. வலது கண்ணில் லேசான பார்வை மட்டுமே இருந்தது. தற்போது, வலது கண்ணில் முழுமையாக பார்வை கிடைக்கப் பெற்றுள்ளார். இடது கண்ணில் பார்வை மேம்பட சிகிச்சை அளிக்க உள்ளோம்,'' என்று தெரிவித்தார்.