மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பை எப்போதும் பரபரப்பாக காணப்படும் நாட்டின் மிக முக்கியமான நகரம். இங்கு கடலின் மேற்பரப்பில் இரண்டு பகுதிகளை இணைக்கும் விதத்தில் கட்டப்பட்டிருக்கும் பாலம் வாஷி மேம்பாலம். மிகப்பெரிய மேம்பாலமான இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் எப்போதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும்.
தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்:
இந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பும் வழக்கம்போல அந்த பாலத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் சிவாஜிராவ் பச்ரே, ராஜூ தண்டேகர், ரத்தோட் மற்றும் தாம்பே ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பாலத்தின் தடுப்பு கம்பியை தாண்டி ஆபத்தான நிலையில் பாலத்தில் இருந்து கடலில் குதிக்கும் விதத்தில் நின்று கொண்டிருந்தார்.
அவர் அப்படி நிற்பதை கண்ட வாகன ஓட்டிகளும், அந்த வழியே சென்று கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் அந்த பெண்ணை பார்த்து கூச்சலிட்டனர். இதைக்கண்ட போக்குவரத்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த பெண்ணை பாலத்திற்கு வருமாறு அவர்கள் அழைத்தனர். ஆனால், அந்த பெண் தன்னிடம் யாராவது வந்தால் தான் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்,
போக்குவரத்து காவலர்கள் சாமர்த்தியம்:
இதனால், அந்த இடத்தில் மேலும் பரபரப்பு எகிறியது. அவரை காப்பாற்ற யாராவது அருகில் சென்றால் குதித்து விடுவது போலவே அந்த பெண் மிரட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் அந்த பெண்ணிடம் பொதுமக்கள் யாரும் நெருங்காத வகையில் அனைவரையும் தூரமாக விலகி நிற்கச் சொன்னார்கள். அந்த பெண் மற்றொரு திசையில் திரும்பி அங்கிருந்தவர்களிடம் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த சமயத்தில், அங்கிருந்த காவலர்கள் மிகவும் சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு அந்த பெண்ணை ஆபத்தான பகுதியில் இருந்து காப்பாற்றி பாலத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் அனைத்தையும் அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்தார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பெண்ணை சாமர்த்தியமாக காப்பாற்றிய போக்குவரத்து காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவர்களது துறை சார்பிலும் அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் என்ன காரணத்திற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க: Crime: தரதரவென இழுத்து! 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...கிருமிநாசினியை குடிக்க வைத்த கொடூரம்...நடந்தது என்ன?
மேலும் படிக்க: Haryana Clashes: மணிப்பூரே ஓயல...கலவர பூமியான ஹரியானா...மசூதிக்கு தீ வைத்து எரிப்பு...உண்மையில் என்னதான் காரணம்?