குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பை ஏபிபி-சி வோட்டர் இணைந்து நடத்தியுள்ளது.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (நவ.03) அறிவித்தது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.
இந்நிலையில், வரவிருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் மீது மக்கள் கோபம் மற்றும் அதிருப்தியில் இருக்கின்றனர் எனினும் தனது மேற்குக் கோட்டையான குஜராத்தை பாஜக எளிதில் மீண்டும் தன் வசப்படுத்தும் என்றும் ஏபிபி-சிவோட்டர் இணைந்து நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கணிப்பு முடிவுகள்
- 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், பாஜக அரசின் மீது ஒருபுறம் மக்கள் மத்தியில் கடும் கோபமும் நிலவுகிறது. நமது கருத்துக்கணிப்பில் 43 விழுக்காட்டினர் தாங்கள் ஆளும் பாஜக அரசின் மீது கோபமாக இருப்பதாகவும், ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
- ஏபிபி சி வோட்டர் கணக்கெடுப்பின் படி, கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 33 விழுக்காட்டினர் வேலையில்லாத் திண்டாட்டத்தை வாக்கு வங்கியை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
- சுமார் 18 விழுக்காட்டினர் மின்சாரம், தண்ணீர், சாலைகளில் கவனம் தேவை என்று கருதுகின்றனர்.
- அதே சமயம் 15 விழுக்காட்டினர் குஜராத்தில் நிலவும் விவசாயிகளின் அவலநிலையை முக்கியப் பிரச்சினையாகக் கருதுகின்றனர்.
- தேர்தல் பிரச்சாரங்களில் பாஜகவின் துருப்புச் சீட்டாக இருக்கும் பாதுகாப்பு மற்றும் தேசியப் பிரச்னைகள், வாக்கெடுப்பின் முடிவைக் கணிசமாகப் பாதிக்கக்கூடிய மிக முக்கியமான காரணியாக பெரும்பான்மையினர் வாக்களித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்து வருகிறது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இம்முறை குஜராத் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் இந்தாண்டு நடைபெறும் தேர்தலிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று ஏபிபி சி வோட்டர்ஸ் கணித்துள்ளது. அதாவது பாஜக இந்தாண்டு சட்டபேரவைத் தேர்தலில் 135 முதல் 143 இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
[பொறுப்புத்துறப்பு: தற்போதைய கருத்துக் கணிப்பு/சர்வே சிவோட்டரால் நடத்தப்பட்டது. நிலையான RDD இலிருந்து பெறப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் இந்தத் தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இது ±3 முதல் ±5% வரை பிழையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் அனைத்து அளவுகோல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளபடியே முடிவுகள் இருக்க வேண்டியது அவசியமில்லை.]