மத்தியப்பிரதேசத்தில் ஒரு சமோசா தொடர்பான வாக்குவாதத்தால் ஒரு உயிரே பறிபோயுள்ளது


மத்தியப் பிரதேசம் பந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் பஜ்ரு ஜய்ஸ்வால். 30 வயதான இவர் அருகேயுள்ள சமோசா ஸ்டாலுக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். சமோசா சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கும் போது சமோசா விற்பனை செய்த கன்சன் சாகு என்பவர் இருண்டு சமோசா 10 ரூபாய் என தெரிவித்துள்ளார். ஆனால் பஜ்ருவோ, நேற்று வரை இரண்டு சமோசா 15 ரூபாய் தானே? ஏன் இன்று 20 ரூபாய் என வாக்குவாதம் செய்துள்ளார்.


அதற்கு மூலப்பொருட்களின் விலை ஏறிவிட்டதால் சமோசாவின் விலை ஏறிவிட்டதாக கடைக்காரரும் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத பஜ்ரு தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் பஜ்ருவுக்கும், கன்சன் சாகுவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கடைக்காரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டார். புகாரை ஏற்றுக்கொண்ட அமர்கண்டாக் போலீசார், பிரிவு 294, 506, 34ன் கீழ் வழக்குப்பதிவு செய்து பஜ்ரூவை விசாரணை செய்துள்ளனர். விசாரணைக்கு சென்று வீடுதிரும்பிய பஜ்ரு, பெட்ரோல் ஊற்றி தனக்குதானே தீவைத்துக்கொண்டுள்ளார். இதனைக்கண்ட அக்கம் அக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பஜ்ரூ உயிரிழந்தார். 


இந்த விவகாரம் இணையத்தில் வேகமாக பரவியது. சமோசா விலை அதிகரித்ததை தட்டிக்கேட்ட பஜ்ருவை, சமோசா கடைக்காரர் தீயிட்டுக் கொளுத்தியாதாகவும் வதந்தி பரவியது. இதனால் பஜ்ருவின் குடும்பத்தினர் தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சமோசா கடைக்காரர் தெரிவித்துள்ளார். 






இந்த விவகாரம் குறித்து பேசிய மத்தியப்பிரதேச போலீசார், பஜ்ருதான் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு உடலில் தீ வைத்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது. நேரில் பார்த்த சாட்சியும் அதைத்தான் கூறுகிறது. ஆனாலும் இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விசாரணை பல கோணங்களில் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளனர். சமோசாவின் விலை ஏறியதால் வாக்குவாதம் செய்து, அதற்கு விலையாய் ஒரு உயிரே போன சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050