தரமற்ற சிகிச்சை: 60 தனியார் மருத்துவமனைகள் உரிமங்கள் ரத்து!

மத்திய பிரதேசத்தில் போதிய வசதிகளும், மருத்துவ வசதிகளும் இல்லாத 60 தனியார் மருத்துவமனைகளில் உரிமங்களை அந்த மாநில அரசு ரத்து செய்துள்ளது. மேலும், 301 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.

Continues below advertisement

கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக நாட்டில் கடுமையான பாதிப்பும், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அந்த மாநிலத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர். இதனால், அந்த மாநில மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Continues below advertisement

மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அதிகளவு கட்டணம் வசூலிப்பதாகவும், அதே சமயத்தில் அதிக கட்டணத்தை வசூலித்துவிட்டு சிகிச்சையும் தரமற்ற நிலையில் அளிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சையில் காட்டிய அலட்சியப் போக்கு காரணமாகவே மாநிலத்தில் உயிரிழப்புகள் அதிகரித்தது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. தனியார் மருத்துவமனைகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்ததையடுத்து, அந்த மாநில சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டது.


மாநிலத்தில் உள்ள 52 மாவட்டங்களிலும் கடந்த இரு மாதங்களாக மாநில சுகாதாரத்துறை தலைமை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தனியார் மருத்துவமனைகளில் பலவற்றில் அதிக கட்டணங்களை வசூலித்துக்கொண்டு முறையான சிகிச்சை அளிக்காததும், மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாததும், ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடாக இருந்ததையும் அதிகாரிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், பல மருத்துவமனைகளிலும் கடுமையான முறைகேடுகள் நடைபெற்று வந்ததையும் கண்டறிந்தனர்.

 மாநிலத்தின் முக்கிய நகரங்களான போபால் சரகத்தில் உள்ள 10 தனியார் மருத்துவமனைகளும், குவாலியர் சரகத்தில் உள்ள 24 தனியார் மருத்துவமனைகளும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. பல தனியார் மருத்துவமனைகளில் ஐ.சி.யூ. வார்டுகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர்களே இல்லாமல் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சில மருத்துவமனைகள் ஹோமியோபதி மருத்துவர்களையும், ஆயுஷ் மருத்துவர்களையும் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படுத்தி வந்ததை கண்டும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.


இதன்காரணமாக மத்திய பிரதேசத்தில் உள்ள 60 தனியார் மருத்துவமனைகளின் உரிமத்தை அந்த மாநில அரசு ரத்து செய்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 301 தனியார் மருத்துவமனைகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

உரிமம் ரத்து செய்யப்பட்ட மருத்துவமனைகளில் சில மருத்துவமனைகள் தங்களது உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தன. ஆனால், மாநில அரசு கொரோனா சிகிச்சைக்கு நவீன உபகரணங்கள் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே உரிமம் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் குறைந்தது எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற மூன்று மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் தரமற்ற சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைகளுக்கு உரிமம் அளித்தது யார்? என்று அந்த மாநில காங்கிரஸ் நிர்வாகி ஜே.பி. தனோபியா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசு தங்கள் மேல் உள்ள தவறை மறைப்பதற்காக தனியார் மருத்துவமனைகள் மீது குற்றம் சாட்டுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Continues below advertisement