One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த, மேற்கொள்ள வேண்டிய சட்ட திருத்தங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்:


மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை  கண்டது. ஆனால், தற்போது அதை மீண்டும் நடைமுறைப்படுத்துவதில் பல தடைகள் நிலவுகின்றன. பல அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். 2029 தேர்தலை முன்னிட்டு இந்த திட்டத்தை அமல்படுத்த விரும்பினால், மக்களவை மற்றும் மாநிலங்களவகளில் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். கூட்டாட்சி அமைப்பான நம் நாட்டில், மாநில அரசுகளின் ஒப்புதலும் முக்கியமானது ஆகும்.


ஒரே நாடு ஒரே தேர்தல் புதிய திட்டம் அல்ல?


ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் முன்பு போல் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக,  நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஆகும். இதனால் தேர்தல் செலவு குறைவதோடு, தேர்தல்களால் மக்கள் நலத்திட்டங்கள் தாமதமாவதும் நீங்கும் என கூறப்படுகிறது. கடந்த காலத்தில் 1951 முதல் 1967 வரை நாட்டில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தான். அதன் பிறகு நடந்த அரசியல் நிகழ்வுகளால் மாநிலங்களில் ஆட்சிகள் கவிழ்ந்தன. இடைத்தேர்தல்கள் வந்தன. பல்வேறு மாநில சட்டசபைகளின் தொகுதிகள் மறுவரையற செய்யப்பட்டன. மக்களவைக்கும், மாநில சட்டசபை தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லாமல் போனது. ஆனால், 2014-ம் ஆண்டு முதல் தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்துடன் மக்கள் முன் வந்த, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த முறை அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. அதற்காக 2019ல் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து இப்போது அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.


பரிந்துரைக்கப்பட்ட 6 அரசியலமைப்பு திருத்தங்கள்


தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றால், சில மாநில சட்டசபைகளின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். மேலும் சில மாநிலங்களில் சட்டமன்றங்களின் பதவிக்காலம் குறைக்கப்பட வேண்டும். மக்களவை தேர்தல் நடந்தாலும், அந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப தேர்தல் நடத்த, சுமார் 6 அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மாற்றங்கள் உட்பட 6 அரசியலமைப்புத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கோவிந்த் கமிட்டி தெரிவித்துள்ளது. அதன்படி, 



  • மக்களவை மற்றும் மாநிலங்களவயின் கால வரம்பு தொடர்பாக 83வது பிரிவு திருத்தப்பட வேண்டும்.

  • மாநில சட்டசபைகளின் காலவரையறையை நிர்ணயிக்கும் பிரிவு 172(1) லும் திருத்தங்கள் தேவை.

  • சட்டப்பிரிவு 83(2) ன்படி, அவசர காலங்களில் சட்டசபையின் பதவிக்காலம் ஓராண்டுக்கு மிகாமல் இருக்க நாடாளுமன்றத்தின் சட்டத்தின் மூலம் இச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். 172(1) பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு இந்த வசதி உள்ளது.

  • மேற்குறிப்பிடப்பட்டதை தவிர, மத்திய, மாநில அரசுகளைக் கலைப்பது தொடர்பான அதிகாரத்தை குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு மாற்றும் சட்டப்பிரிவு 85(2)பி உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்பான சட்டப்பிரிவு 174(2)பியில் அரசியலமைப்புத் திருத்தங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

  • மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அனுமதிக்கும் சட்டப்பிரிவு 356,

  • தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் தொடர்பான பிரிவு 324 ஆகியவையும் திருத்தப்பட வேண்டும்.


பாதி மாநிலங்களின் ஒப்புதல் தேவை:


ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் கட்டாயம் என்ற நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், மாநில சட்டமன்றங்களும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசியலமைப்புத் திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற பாஜகவிற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களின் ஆதரவு மட்டுமின்றி, மற்ற கட்சிகளைச் சேர்ந்த சில எம்பிக்களும் ஒத்துழைக்க வேண்டியிருக்கும். பாஜக கூட்டணியின் பலம் 293. அரசியல் சட்ட திருத்தத்திற்கு 362 எம்பிக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல், மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 121. அரசியல் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள, 164 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களின் வார்த்தைகள் மதிக்கப்படுவதால், பாதி மாநில சட்டசபைகள் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த அனுமதிக்க வேண்டும். அதாவது 14க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போது பாஜக தனித்து 13 மாநிலங்களிலும், கூட்டணியாக 20 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது.


நாடு முழுவதும் ஒரே வாக்காளர் பட்டியல்:


ஒரே நாடு ஒரே தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கும், 2ம் கட்டமாக பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முழு செயல்முறையும் நூறு நாட்களில் முடிவடையும். அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால், தேசிய அளவில் வாக்காளர் பட்டியல் ஒரே மாதிரியாக இருக்கும்.  இதனால், வாக்காளர் பட்டியல் பணிக்காக, மத்திய தேர்தல் கமிஷன், மாநில தேர்தல் கமிஷனர்களுடன் கலந்தாலோசித்து, வாக்காளர் பட்டியலை தயாரிக்க உள்ளது. இதற்கு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களும் செய்யப்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட சட்டமன்றங்களைக் கொண்ட யூனியன் பிரதேசங்களில் தேர்தலை நடத்துவதற்கும் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.