கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மாலை 6.42 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்த போது எதிர்பாராமல் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.  


இந்தப் பால விபத்து தொடர்பாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், விபத்து தொடர்பான முக்கிய ஆவணம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விபத்துக்கு தாங்கள்தான் பொறுப்பு என மோர்பி முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.


குஜராத் உயர் நீதிமன்றத்தில் மோர்பி முனிசிபல் கார்ப்பரேஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "பாலம் திறக்கப்பட்டிருக்கக் கூடாது. மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் பழுதுபார்ப்பதற்காக ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.






குடிமை அதிகாரிகளிடமிருந்து தகுதிச் சான்றிதழ் இல்லாமல், குஜராத்தி புத்தாண்டான அக்டோபர் 26 அன்று பாலம் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாலம் எப்படி அறுந்து விழுந்தது போன்ற விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது. இரண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.


இந்த சூழ்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, இன்றைய தினம் மாலையில் மாநகராட்சி அமைப்பு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யாவிட்டால் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறி இருந்தது. இதை தொடர்ந்து, நீதிமன்றத்தில் மோர்பி முனிசிபல் கார்ப்பரேஷன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது.


முனிசிபல் கார்ப்பரேஷன், விபத்துக்கு பொறுப்பு ஏற்று கொண்டதாக நீதிமன்றம் கூறியது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, 150 ஆண்டுகள் பழமையான பாலத்தை டெண்டர் விடாமல் ஓரேவா குழுமத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட விதம் குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.


ஜூன் 2017க்குப் பிறகு, "ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்தம் (2008 இல் கையெழுத்தானது) புதுப்பிக்கப்படாதபோதும், பாலம் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட நிறுவனத்தால் இயக்கப்படுகிறது" என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. 15 ஆண்டுகளுக்கு, பால பராமரிப்பு குறித்த புதிய ஒப்பந்தம் மார்ச் 2022 இல் கையெழுத்தானது.


அந்த ஒப்பந்தத்தின்படி, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக பாலத்தை 8 முதல் 12 மாதங்கள் வரை ஓரேவா குழுமம் மூடி வைக்க வேண்டும் என கட்டுபாடு விதிக்கப்பட்டிருந்தது.