இமாச்சல பிரதேசத்தில் மழை காரணமாக ஏற்பட்ட பேரிடர்கள் 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அம்மாநில வருவாய் துறை அமைச்சர் ஜகத் சிங் நெகி தெரிவித்துள்ளார்.


கடந்த ஜூன் மாதம் முதல் இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. இது தொடர்பாக, வருவாய் துறை மந்திரி ஜெகத் சிங் நேகி தெரிவிக்கையில், ” கடந்த ஜூன் 24-ந்தேதி தொடங்கிய பருவமழையால் மாநிலத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனுடன் தொடர்புடைய வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடரால் 400 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 2,500 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.


கனமழை காரணமாக 11 ஆயிரம் வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. கனமழையால் ஏரளமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.  பல இடங்களில் வன உரிமைகள் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால், நாங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கோரிக்கை வைக்க இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


 கங்கரா மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. தர்மசலாவில் இருக்கும் மாஞ்சி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  ரக்கார் கிராமத்தின் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  தர்மசலாவில் 10 கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக முதல்கட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் கால பாதிப்புகளில் சிக்கி 101 பேர் மாயமாகியுள்ளதாகவும், 1,584 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 40 பேர். அசாமில் 30 பேர், உத்தரபிரதேசத்தில் 27 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 


மழை வெள்ளத்தில் மூழ்கி 892 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 506 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் 186 பேர் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.