சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். எந்த ஒரு காரணமும் இன்றி ஒருவர் மீது ஏற்படும் உணர்வு. அதனால்தான் வேறுபாடுகளை கடந்து, ஒருவரை நேசிக்கிறோம். மற்ற உணர்வுகளை போலவே ஒரே பாலினத்தில் உள்ள இருவர் காதலிப்பதும் ஒரு இயல்பான நிகழ்வே.


ஆனால், தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என விமர்சனம் முன்வைக்கின்றனர். ஆனால், பல நாடுகள் அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன. ஆனால், இந்தியாவில் தன்பாலீர்ப்பு திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளது. 


இச்சூழலில், தன்பாலீர்ப்பு திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க கோரி உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்நிலையில், LGBTQ சமூக மக்களுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ஆர்கனைசருக்கு அவர் அளித்த நேர்காணலில், "சமூகத்தில் அவர்களும் தங்களுக்கென தனிப்பட்ட இடத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் ஆர்.எஸ்.எஸ் இந்தக் கருத்தை ஊக்குவிக்க வேண்டும்.


இத்தகைய மக்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள்; மனிதர்கள் இருக்கும் வரை இருப்பார்கள். இது உயிரியல், வாழ்க்கை முறை. அவர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட இடத்தை வைத்திருக்க வேண்டும். அவர்களும் சமூகத்தின் ஒரு பகுதி என்று உணர வேண்டும். இது எளிதான விவகாரம். இந்தக் கண்ணோட்டத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும்.


ஏனென்றால், அதைத் தீர்ப்பதற்கான மற்ற எல்லா வழிகளும் பயனற்றவை. நீங்கள் பார்க்கிறீர்கள், இந்து சமுதாயம் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போராட்டம் அந்நிய ஆக்கிரமிப்புகள், வெளிநாட்டு தாக்கங்கள் மற்றும் வெளிநாட்டு சதிகளுக்கு எதிராக நடந்து வருகிறது. 


இந்த காரணத்திற்காக ஆர்.எஸ்.எஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளது. மற்றவர்களும் வழங்கியுள்ளனர். அதைப் பற்றிப் பேசியவர்கள் ஏராளம். இந்த காரணங்களால்தான் இந்து சமுதாயம் விழித்திருக்கிறது. போரில் ஈடுபடுபவர்கள் ஆக்ரோஷமாக இருப்பது இயற்கையானது.


பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின் ஆரம்ப காலத்திலிருந்தே இந்தியா பிரிக்கப்படாமல் (அகண்ட்) இருந்து வருகிறது, ஆனால், அடிப்படை இந்து உணர்வு மறக்கப்படும்போதெல்லாம் நாடு பிரிக்கப்பட்டது.


 






எளிமையான உண்மை இதுதான். ஹிந்துஸ்தான் இந்துஸ்தானமாக இருக்க வேண்டும். இந்தியாவில் இன்று வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாம் பயப்பட ஒன்றுமில்லை. ஆனால் அதே சமயம், முஸ்லிம்கள் மேலாதிக்கம் என்ற ஆவேசப் பேச்சுக்களைக் கைவிட வேண்டும்" என்றார்.