எதிர்வரும் நாடாளுமன்றதேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று 3 -வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


மீண்டும் மோடிதான் பிரதமர்:


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாம் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில்,” அடுத்தாண்டு நடைபெறும் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களுக்கு மேல் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்றும், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார். காங்கிரஸ் கடந்த முறை பெற்ற இடங்களை விட குறைவாகவே வெற்றி பெறும்.” என்று தெரிவித்துள்ளார்.






”புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை புறக்கணித்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. இது அவர்களின் எதிர்மறையான அணுகுமுறையை காட்டுகிறது. காங்கிரஸ் மற்றும் அவர்களோடு புதிய நாடாளுமன்ற கட்ட திறப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் அவர்களின் கீழ் தரமான அரசியல் வெளிபடுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.






நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா:


இந்தியாவை ஆட்சி செய்து அதிகாரம் செலுத்துவதற்கான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை, வரும் 28ம் தேதியன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். 


புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புகள்:


புதிய நாடாளுமன்ற கட்டடம் 1200 கோடி ரூபாய் செலவில், 18 ஏக்கர் அளவுக்கு அதாவது 64,500 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.  தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட உள்ளது. பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டடக்கலை திறன் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடம், இரண்டு ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் கட்டப்பட்டுள்ளது.


 இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்களுக்கு மக்களவை பயன்படுத்தப்படுகிறது. 888 இருக்கைகள் கொண்ட மக்களவை மண்டபத்தில் மொத்தம் 1272 இருக்கையில் பொருத்தப்பட்டு உள்ளன. உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக இருக்கைகளில் பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு சாதனங்கள், மாற்றக்கூடிய மைக்ரோ போன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் மல்டிமீடியா காட்சி வசதி உள்ளது. கேலரிகளில் எங்கு அமர்ந்தாலும் சாமானியர்கள் தெளிவாகத் தெரியும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு விசேஷ மற்றும் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மொத்தம் 530 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.




 



  • புதிய பாராளுமன்றம், மத்திய விஸ்டா கட்டிடங்களின் வரிசையில் கட்டப்பட்டுள்ளது, இது ஒரு முக்கோண அமைப்பாகும். இது மக்களவை, மாநிலங்களவை, மத்திய ஓய்வு அறை மற்றும் அரசியலமைப்பு அதிகாரிகளின் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

  • புதிய லோக்சபா சேம்பர் இந்தியாவின் தேசிய பறவையான மயிலைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், புதிய ராஜ்யசபா சேம்பர் தேசிய மலரான தாமரைக்கு ஒத்திருக்கிறது.

  • புதிய கட்டிடத்தில் ஆறு கமிட்டி அறைகள் இருக்கும். தற்போதைய அமைப்பில் இதுபோன்ற மூன்று அறைகள் உள்ளன.

  • அமைச்சர்கள் சபையின் பயன்பாட்டிற்காக 92 அறைகள் இருக்கும்.

  • புதிய கட்டிடத்தில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உள்ள ஒவ்வொரு பெஞ்சிலும் இரண்டு உறுப்பினர்கள் அருகருகே அமர முடியும் 

  • புதிய கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி அமைப்புகள் இடம்பெறும். கட்டிடம் முழுவதும் 100% யுபிஎஸ் பவர் பேக்கப் வழங்கப்படும்.


எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு:


 புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி. டெரிக் ஓ பிரைனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும்,  வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை திமுகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திமுக எம்பி திருச்சி சிவா அறிவித்துள்ளார். அதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மொத்தமாக 19 கட்சிகள் இதுவரை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.