மணிப்பூரில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே ஏற்பட்ட வன்முறை அங்கு தொடர் பதற்றம் நிலவுவதற்கு காரணமாக அமைந்தது. இயல்பு வாழ்க்கை சற்று திரும்பியதை அடுத்து அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், செவ்வாய்கிழமை நடந்த வன்முறை சம்பவங்கள் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடித்து நொறுக்கப்பட்ட அமைச்சர் வீடு:
விஸ்ணுபுரம் மாவட்டத்தில் பிரிவினைவாதி குழு ஒன்று, அப்பாவி ஒருவரை சுட்டு கொன்ற சம்பவம் மீண்டும் வன்முறை சம்பவங்கள் வெடிக்க காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி, மணிப்பூர் பொதுப்பணித்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்தாஸின் வீடு கும்பலால் நேற்று அடித்து நொறுக்கப்பட்டது.
அமைச்சரும் அவரது குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது வீட்டில் சுமார் 100 பேர் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டை அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைதி காக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் அமித்ஷா:
மணிப்பூர் மாநிலத்திற்கு விரைவில் வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ள இரண்டு சமூகங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக அமித்ஷா அறிவித்துள்ளார். அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து வரிவாக பேசிய அவர், "நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து மணிப்பூரில் மோதல்கள் ஏற்பட்டன. இரு குழுக்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்கள் அமைதி காக்க வேண்டும், அனைவருக்கும் நீதி கிடைக்கும். சில நாட்களுக்குப் பிறகு நானே மணிப்பூருக்குச் சென்று மூன்று நாட்கள் அங்கேயே தங்கி அமைதியை நிலைநாட்ட மணிப்பூர் மக்களிடம் பேசுவேன்" என்றார்.
பற்றி எரியும் மணிப்பூர்:
மணிப்பூரில் இந்த மாதம் கலவரம் வெடித்ததில் இருந்து இதுவரை 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்ப்பட்டோர் தங்களின் ஊர்களில் இருந்து வெளியேறி ராணுவ முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 2,000 வீடுகள் எரிக்கப்பட்டன.
மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.
இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.
பழங்குடியினரின் கோரிக்கைதான் என்ன?
"மணிப்பூரில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்க்க மனுதாரர்கள் மற்றும் பிற சங்கங்கள் நீண்ட வருடங்களாக போராடி வருகின்றன" என்று கூறிய நீதிமன்றம், மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் நான்கு வார காலம், அவகாசம் வழங்கியது மணிப்பூர் உயர் நீதிமன்றம்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பழங்குடியினர் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடிக்க மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது.