PM Modi Visit Kuwait: கடந்த 43 ஆண்டுகளில் குவைத் பயணிக்கும் முதல் இந்திய பிரதமர், என்ற பெருமையை மோடி பெறுகிறார்.


பிரதமர் மோடி குவைத் பயணம்:


பிரதமர் நரேந்திர இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணமாக, குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (CPV & OIA) அருண் குமார் சாட்டர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் மோடி டிசம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் குவைத் நாட்டின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் குவைத்துக்குப் பயணம் மேற்கொள்கிறார். இது 43 ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டிற்கு செல்லும் ஒரு இந்தியப் பிரதமரின் பயணத்தை குறிக்கிறது. எனவே, இது கணிசமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.



குவைத்தில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல்


குவைத்தில் பிரதமர் மோடி பயான் அரண்மனையில் தங்கவைக்கப்பட்டு மரியாதை அளிக்கப்படும்.  குவைத் தலைமையுடன் உயர்மட்ட விவாதங்களில் ஈடுபடுவதோடு, குவைத் பட்டத்து இளவரசரையும் தனியே சந்திக்க உள்ளார். குவைத் பிரதமருடன் தூதரக அளவிலான பேச்சுக்கள் இருக்கும். பட்டத்து இளவரசர் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதோடு, ஒரு சமூக நிகழ்வில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடவும், தொழிலாளர் முகாமுக்குச் செல்லவும், குவைத் அமீர் சிறப்பு விருந்தினராக 26 வது அரேபிய வளைகுடா கோப்பை தொடக்க விழாவில் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் இந்த பயணத்தில் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். 


குவைத் இந்தியா உறவு


குவைத்துக்கான இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, பிரதமர் மோடியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். அதன்படி,  " 43 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத்துக்கு இந்திய பிரதமருக்கு இது முதல் பயணம் எனும் சூழலில், பிரதமர் மோடி இதுவரை செல்லாத ஒரே வளைகுடா நாடு குவைத் மட்டுமே. 10 ஆண்டுகளில் முதல்முறையாக இருநாடுகளுக்கு இடையே, உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. குவைத் இந்தியர்கள் அதிகளவில் வாழும் வெளிநாடுகளில் ஒன்றாகுன்ம். கடந்த ஆண்டு, குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட பணம் 6.3 பில்லியன் டாலர்கள். கூடுதலாக, குவைத்தின் சிறந்த வர்த்தக நண்பராக இந்தியா உள்ளது, குவைத் இந்தியாவின் ஆறாவது பெரிய கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடாகும். இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு $2 பில்லியனைத் தாண்டியது, மேலும் "மேக் இன் இந்தியா" தயாரிப்புகளின் வருகை அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.