”உலகத் தலைவர்களிலேயே அதிகம் விரும்பப்படுபவர்” என பிரதமர் மோடியைப் புகழ்ந்து இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


அரசு முறை பயணமாக இன்று (மார்ச்.02) இந்தியா வந்துள்ள இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனியை குடியரசுத் தலைவர் மாளிகையில் முன்னதாக பிரதமர் மோடி வரவேற்றார்.


நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 03 - 04) இந்தியாவில் நடைபெறவிருக்கும் எட்டாவது ராய்சினா உரையாடலில் கலந்துகொள்ள இத்தாலிய பிரதமர் மெலோனி வருகை தந்துள்ள நிலையில்,  அவருக்கு முப்படைகளின் மரியாதையுன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து பேசிய மெலோனி, ”உலகெங்கும் உள்ள தலைவர்களிலேயே மிகவும் நேசிக்கப்படுபவர் பிரதமர் மோடி. அவர் ஒரு முக்கியத் தலைவராக இருக்கிறார் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்காக நான் வாழ்த்துகிறேன்” என ஜியார்ஜியா மெலோனி பேசினார்.


இந்நிலையில் இத்தாலிய பிரதமர் புகழ்ந்து பேசுகையில் பிரதமர் மோடியின் ரியாக்‌ஷன் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






எட்டாவது ராய்சினா உரையாடலின் தொடக்க அமர்வில் ஜியோர்ஜியா மெலோனி தலைமை விருந்தினராகவும், முக்கிய பேச்சாளராகவும் கலந்துகொள்கிறார்.


முன்னதாக மெலோனியை டெல்லி விமான நிலையத்தில் சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பவார் வரவேற்றார். மேலும் மெலோனி வருகை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் இருநாட்டு உறவு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.




இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உடனான சந்திப்புக்குப் பிறகு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், செமி கண்டக்டர், தொலைத்தொடர்பு மற்றும் விண்வெளி போன்ற இணை உற்பத்தி மற்றும் இணை வளர்ச்சித் துறையில் இந்தியாவில் புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும், இவை இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.


மேலும், இந்தியாவும் இத்தாலியும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையே கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளதாகவும், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் போன்ற விவகாரங்களில் இத்தாலியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.