மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்து இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது. அதில், 2-ம் நாளான நேற்று விளக்கவுரை ஆற்றிய பிரதமர் மோடி, இந்தியா - பாகிஸ்தான் மோதலை தானே தடுத்ததாக கூறிவரும் ட்ரம்ப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளக்கமளித்தார். அது என்ன விளக்கம்.? விரிவாக பார்க்கலாம்.

“எந்த உலகத் தலைவரும் பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கூறவில்லை“

‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்து மக்களவையில் விளக்கமளித்த பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், பாகிஸ்தான் மிகப் பெரிய தாக்குதலை நடத்த உள்ளது என தன்னிடம் கூறியதாகவும், அதற்கு, அப்படி நடத்தினால் பெரிய அளவில் பதிலடி தரப்படும் என்று தான் பதிலளித்ததாகவும் கூறினார்.

மேலும், ட்ரம்ப் பெயரை குறிப்பிடாமல், உலகின் எந்த தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தும்படி கூறவில்லை எனவும், தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

“எங்களால் முடியவில்லை, தயவுசெய்து தாக்குதலை நிறுத்துங்கள்“ என்று பாகிஸ்தான் கதறியதாகவும், நாம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துவிட்டோம் எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

“பாகிஸ்தானை நம்பி காங்கிரஸ் கட்சி நடத்துகிறது“

அதோடு, இந்திய படைகளை உலகமே மதிக்கிறது என்றும், ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பாராட்டும் மனமில்லை என்றும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

மேலும், பாகிஸ்தானை நம்பி காங்கிரஸ் கட்சி நடத்துவதாகவும், அரசியலுக்காக பாகிஸ்தானை அக்கட்சி நம்பி இருப்பதாகவும் சாடினார் மோடி.

கடந்த மே மாதம் 10-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்‘ நடவடிக்கை நிறுத்தப்படுகிறது என இந்தியா அறிவித்தது என்றும் உலக அளவில் நமக்கு ஆதரவு தரப்பட்ட நிலையில்,, துரதிஷ்டவசமாக, துணிச்சல் மிகுந்த நம்முடைய நாட்டின் வீரர்களுக்கு காங்கிரசின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என்று பிரதமர் விமர்சித்தார்.

“சதித் திட்டம் ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டது“

தொடர்ந்து பேசிய மோடி, இந்தியாவில் வன்முறைகளை பரப்புவதற்கான சதித் திட்டமே இது என்றும், அந்த சதித் திட்டம், ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஏப்ரல் 22-ம் தேதி தான் வெளிநாட்டில் இருந்த நிலையில், உடனடியாக நாடு திரும்பியதாகவும், இங்கு வந்ததும், கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தி, பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி தரப்பட வேண்டம் என்று தெளிவாக அறிவுறுத்தியதாகவும் விளக்கினார் பிரதமர் மோடி.

“ராணுவத்திற்கு முழு சுதந்திரம் தரப்பட்டது“

பாகிஸ்தானின் தொலைதூர பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், ராணுவத்திற்கு முழு அளவில் சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். எந்த பகுதியில், எப்போது, எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை ராணுவமே முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை என கூறிய அவர், அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணியாது, அந்த மிரட்டல் இனி எடுபடாது என்றும், இந்தியா ஒருபோதும் பயப்படாது என்றும் உறுதிபட தெரிவித்தார் பிரதமர் மோடி.