மத்திய பிரதேசத்தின் தார் என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானை கண் இமைக்கும் நேரத்தில் மண்டியிட வைத்த ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக இந்திய ராணுவத்தை பாராட்டினார். அவர் பேச்சின் முழு விவரங்களை தற்போது காணலாம்.
தீவிரவாதியின் வீடியோவை சுட்டிக்காட்டி இந்திய ராணுவத்திற்கு பிரதமர் மோடி புகழாரம்
பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை ஒட்டி, மத்திய பிரதேசத்தின் தார் என்ற இடத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மோடி, “நேற்று தான், தேசமும் உலகமும் மற்றொரு பாகிஸ்தான் பயங்கரவாதி அழுது தனது நிலையை வெளிப்படுத்தியதைக் கண்டது“ என கூறினார். மேலும், இது புதிய இந்தியா - யாருடைய அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாத ஒன்று எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இந்திய தாயின் பாதுகாப்பிற்கு நாடு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் சிந்தூரத்தை அகற்றினர். நாங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத முகாம்களை அழித்தோம். நமது துணிச்சலான ஆயுதப் படைகள், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தன“ என நமது ராணுவ வீரர்களை பாராட்டினார்.
பயங்கரவாதி மசூத் இலியாஸ் காஷ்மீரி பேசியது என்ன.?
தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள வீடியோவில் பேசியுள்ள ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் கமாண்டராக செயல்படும் பயங்கரவாதி மசூத் இலியாஸ் காஷ்மீரி, பயங்கரவாதத்தை தழுவி, டெல்லி, காபூல் மற்றும் காந்தகரில், பாகிஸ்தானை பாதுகாக்க சண்டையிட்டுள்ளதாக கூறியுள்ளான்.
மேலும், அனைத்தையும் இழந்த பிறகு, மே 7-ம் தேதி, மவுலானா மசூத் அசாரின் குடும்பத்தை பஹவல்பூரில் வைத்து இந்திய படைகள் துண்டாடிவிட்டதாக அந்த வீடியோவில் மசூத் இலியாஸ் காஷ்மீரி கூறியுள்ளான்.
இந்த வீடியோவை சுட்டிக்காட்டி தான், பிரதமர் மோடி இந்திய ராணுவத்தையும், ஆபரேஷன் சிந்தூரையும் பாராட்டியுள்ளார்.