அனலாக் சிக்னல் - வயர் இல்லாமல் பேசும் வசதி அறிமுகம் 1 - ஜி சேவை
1980 - களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது. அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமான போது 2.4 முதல் 14.4 kbps வேகத்தை மட்டுமே கொண்டதாக இருந்துள்ளது.
இன்டர்நெட் , SMS , MMS வசதி அறிமுகம் 2 - ஜி சேவை
பின்லாந்து நாட்டில் 1991-ம் ஆண்டு தான் முதன் முதலாக 2G சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்திய சேவை இது தான். இதில் போனில் தொடர்பு கொண்டு பேசவும் செய்யலாம். 2G சேவையில் தான் குறுஞ் செய்திகளை அனுப்பும் SMS வசதி , படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகமாகின. இதில் தான் முதன் முதலாக சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன.
வீடியோ கான்பிரன்ஸ், ஜி.பி.எஸ் வசதி அறிமுகம் 3 - ஜி சேவை
2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து , அதிக இன்டர்நெட் வேகத்தின் தேவை அதிகமானது. இதன் காரணமாக சிக்னல்களை சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் 'பாக்கெட் ஸ்விட்சிங் முறை' அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது. ஜப்பான் நாட்டில் 2001-ம் ஆண்டே இந்த சேவை அறிமுகமானது. வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி , ஜி.பி.எஸ் வசதி ஆகியவை இதற்குப் பிறகு தான் பயன்படுத்தப்பட்டது.
லைவ் ஸ்டிரீமிங் , மொபைல் டிவி பயன்பாடு 4 - ஜி சேவை
முதன் முதலாக 2009 - ம் ஆண்டு தென்கொரியாவில் 4 ஜி சேவை அறிமுகமானது. அதிவேக இன்டர்நெட் வசதி , துல்லியமான வீடியோ கால்கள், நொடிப்பொழுதில் மெயில் அனுப்புவது என தொலைத் தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4G சேவை. ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன. லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி என இன்டர்நெட் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை.
அதிவேக இணையதள சேவை , கிளவுட் வசதி , சிசிடிவி கண்காணிப்புக்கு ஏற்றது 5 - ஜி சேவை
அனைத்து தகவல்களையும் கிளவுட் வசதியில் சேமிக்கலாம். எனவே மெமரி கார்டு , பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும்.
மிக அதிவேக பயன்பாடு - 6 ஜி
தொலைத் தொடர்பு துறையில் "வயர்லெஸ் நெட்வொர்க்" எனப்படும். கம்பியில்லா அமைப்புக்கான தொழில் நுட்பம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மேம்படுத்தப்படுகிறது. இது மொபைல் போன் அழைப்பு மற்றும் அதிவேக இணைய பயன்பாட்டுக்கு உதவுகிறது. தற்போது 5 - ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை வயர்லெஸ் நெட்வொர்க் தொழில் நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் 6 - ஜி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தும் ஆய்வு பணியில் தெலுங்கானா மாநிலம் , ஹைதராபாதில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த பணிகள் அங்கு உள்ள தொலைத் தொடர்பு ஆராய்ச்சியாளரும் , பேராசிரியருமான கிரண் குச்சி தலைமையில் நடக்கிறது. அவர் கூறியதாவது , ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் உலகம் புதிய மொபைல் போன் தொழில் நுட்பத்தை வரவேற்கிறது. 2010 - 20 வரை 5 - ஜி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தும் பணிகள் நடந்தன. இந்தியாவில் 2022 ல் 5 ஜி அறிமுகமானது.
6 ஜி - 2030 ல் அறிமுகம்
அதே போல் 6 - ஜியை அறிமுகப்படுத்தும் பணி உலகளவில் 2021 - ல் துவங்கியது. 2029 - க்குள் 6ஜி தொழில் நுட்பம் உலகளாவிய தர நிலைகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் 2030 - ல் அறிமுகமாகும். கடந்த 10 ஆண்டுகளாக நாம் தொலைத் தொடர்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு செலவிட்ட உழைப்பு மற்றும் முதலீடு பலனளிக்க துவங்கியுள்ளன.
இதனால் , இந்தியாவில் 6 ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவராக மட்டும் இருக்காது. உலக அளவில் இந்த தொழில் நுட்பத்தை வழங்குபவராகவும் அதற்கான தரநிலைகளை அமைப்பவராகவும் வளர்ந்து நிற்கும். '6ஜி தொழில் நுட்பம், '5ஜி'யை விட வேகமானது மட்டுமல்ல , செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இயங்கும். அதற்கான சிப்களை உருவாக்கி உள்ளோம்.
தானியங்கி வாகன இயக்கம் , விவசாயம் , தொழிற்சாலைகள் , பள்ளிகள் , மருத்துவமனைகள் , பாதுகாப்பு மற்றும் பேரிடர் என அனைத்திலும் இது மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் என இவ்வாறு கூறினார்.