காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று காணொளி காட்சி வாயிலாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். கொரோனா குறித்தும் அதை மத்தியில் ஆளும் மோதி அரசு கையாளும் விதம் குறித்தும் அவர் பல தகவல்களைஅந்த சந்திப்பில் முன்வைத்தார். இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை யாராலும் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த இரண்டாம் அலைக்கு முழுக்காரணமும் பிரதமர் மோதியே என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோதி இன்னும் கொரோனாவை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் அந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 




கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி போடுவது ஒன்றே சரியான தீர்வாக இருக்கும் என்றும், சமூக இடைவெளியும் முகக்கவசம் அணிவதும் கொரோனாவை தடுப்பதற்கான தற்காலிக வழிகள் மட்டுமே அன்றி அதுவே தீர்வல்ல என்றும் கூறியுள்ளார். மோதி அரசு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை என்றும், இதுவரை இந்திய ஜனத்தொகையில் வெறும் 3 விழுக்காடு மக்கள் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். 




இந்தியா தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்தவில்லை என்றால் கொரோனாவின் பல்வேறு அலைகளை இந்தியா சந்திக்கவேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இறுதியாக, மக்கள் மத்தியில் பிரதமர் மோதி ஏற்கனவே உடைந்து போய்விட்ட தனது அந்தஸ்தை சரிசெய்ய நினைக்கின்றார் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். 


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  1.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.11 லட்சம், நேற்று 1.86 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 1.73 லட்சமாக குறைந்துள்ளது.  இந்தியாவில் இரண்டாவது நாளாக 2 லட்சத்துக்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.


இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரேநாளில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 601 பேர் குணமடைந்துள்ளனர். 




கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோர் விகிதம் 90.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22 லட்சத்து 28 ஆயிரத்து 724-ஆக குறைந்துள்ளது. இதுவரை 20.89  கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 30 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பாஜக தரப்பில் பதிலடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பை காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.