PM Modi: 'தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும், தமிழக மக்களையும் நேசிக்கிறேன்..' உருக்கமாக பேசிய பிரதமர் மோடி..!

தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் நேசிக்கிறேன் என்று பிரதமர் மோடி விவேகானந்தர் இல்ல நிகழ்ச்சியில் பேசினார்.

Continues below advertisement

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

Continues below advertisement

அங்கு பேசிய பிரதமர் மோடி, " நான் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், சென்னையையும் நேசிக்கிறேன். தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது  மகிழ்ச்சியாக உள்ளது.

உருக்கமாக பேசிய பிரதமர் மோடி:

தமிழ் மக்கள் மீது எனக்கு எப்போதும் பற்று உள்ளது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய விவேகானந்தர் தமிழ்நாடுக்குத்தான் வந்தார். சென்னை வந்தபோது அவருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள பாறை மீது அமர்ந்து தியானம் செய்தபோதுதான் விவேகானந்தர் தனது வாழ்வின் நோக்கத்தை உணர்ந்தார். 

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மிகவும் பிரசித்தி பெற்றது. மேற்குவங்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் விவேகானந்தர் தமிழ்நாடு வந்தபோது கதாநாயகனை போல அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில்  விவேகானந்தர் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய மக்களிடம் ஒற்றுமை காணப்பட்டது.

தற்போதைய இந்தியாவை நினைத்து விவேகானந்தர் பெருமைப்படுவார். சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை காணக்கூடிய பாக்கியம்  எனக்கு கிடைத்துள்ளது. குஜராத்தில் உள்ள சவுராஷ்டிராவில் தமிழ்சங்கம் நடக்கப்போவது மகிழ்ச்சியை தருகிறது" என்றார்.

திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய மோடி:

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய மோடி, "பிறருக்கு உதவி செய்து வாழ்வதால் கிடைக்கும் நற்பெயரைப் போல் வேறு எதிலும் கிடைக்காது" என்றார்.

"அனைவருக்கும் சமமான நிலையை உறுதிப்படுத்தினால் சமூகம் முன்னேற்றம் அடையும். இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கானது என பல்வேறு நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஒவ்வொரு இந்தியரும் தனக்கான நேரம் வந்துவிட்டதாக உணர்கின்றனர். சர்வதேச நாடுகளை நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் எதிர்கொண்டு வருகிறோம்" என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி இன்று மதியம் 1.35 மணிக்கு ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் சென்னைக்கு 2.45 மணிக்கு வந்தார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி,  2,400 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்ட, ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்தார்.

சென்னைக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் 22ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினரின் தொடர் போராட்டம் காரணமாக, இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தரப்பில் வெளியான தகவலின் பேரில் காங்கிரஸ் கட்சியினர் போலீசார் பாதுக்காப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola